மதுரை மாவட்டம், வில்லாபுரம் மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகுல்ராஜ் ஜெயராமன். மதுரை மக்களுக்காக பிரத்யேக நகர்ப்புற பேருந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் இறுதியாண்டு (B. Sc. Information Technology) பயின்று வருகிறார். கல்லூரி பயிலும் காலத்திலேயே மதுரை மக்களின் அன்றாட பிரச்னைகளை உற்றுநோக்கி, தான் சந்தித்த பிரச்னைகளையும் மையப்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் இணையதள உதவியில்லாமல் இயங்கக்கூடிய “மக்கள் பஸ்” என்ற செயலியை கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்தச் செயலி பற்றி ராகுல்ராஜ் நம்மிடையே பகிர்ந்துகொண்டது, மக்கள் பஸ் செயலியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது வந்தது? ``நான் கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போதிலிருந்தே வீட்டிலிருந்து கல்லூரிக்கு தினமும் பஸ்ஸில்தான் பயணிப்பேன். ஆரம்பத்தில் எனக்கு பஸ் விவரங்கள் எதுவுமே தெரியாது. எப்போது பஸ் வரும். எந்த நேரத்தில் பஸ் வரும் என்ற ஐடியாவே இல்லாமல் இருந்தேன். நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன் என்று பார்த்தால், என்னைப் போலவே நிறைய மக்கள் இந்தப் பிரச்னையைச் சந்தித்து வருவது தெரிந்தது. அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மக்கள் பஸ் செயலி." மாணவர் ராகுல்ராஜ் இந்தச் செயலியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? ``இந்தச் செயலி இணைய வசதி இல்லாம இயங்கக்கூடியது. செயலியை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். புறப்படும் இடத்தையும் (From Bus Stop/Stand) செல்ல வேண்டிய இடத்தையும் (To Bus Stop/Stand) உள்ளீடு செய்தாலே அந்த வழித்தடத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான நேரடி மற்றும் மாற்றுப் பேருந்துகள் எனப் பேருந்து எண்ணையும், அந்தப் பேருந்து பயணிக்கக்கூடிய வழித்தடத்தையும் காட்டும். இந்தச் செயலி பற்றியோ, பேருந்து வழித்தடம், நேரம் என இவற்றைப் பற்றி புகாரும் தெரிவிக்கலாம். அதற்கு மட்டும் இணையவசதி தேவை" பிற பேருந்து செயலியிலிந்து மக்கள் பஸ் செயலி எவ்வாறு வேறுபடுகிறது? ``தமிழ்நாட்டில் பெருநகரங்களையும், நகரங்களையும் இணைக்கிற மாதிரிதான் பேருந்து செயலிகள் இருக்கு. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நகரத்திற்கும் நகர்ப்புற பேருந்து செயலி இருக்கிறதா என்றால் சென்னை, பெங்களூரு என விரல் விட்டு எண்ணி விடலாம். அதற்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் மதுரை என்ற தொலைநோக்குப் பார்வையிலேயே இந்தச் செயலியை மதுரை மக்களுக்காக நான் உருவாக்கியிருக்கிறேன்." இந்தச் செயலியை உருவாக்கும்போது சந்தித்த சவால்கள் என்னென்ன? ``நானொரு கல்லூரி மாணவர். ஆரம்பத்தில் என்னிடம் மடிக்கணினி இல்லை. செயலி உருவாக்குவது பற்றிய அடிப்படை மட்டும்தான் தெரியும். பிறகு, அதற்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொண்டேன். ‘பிளட்டர்’ எனும் கூகுளின் மென்பொருளைக் கற்றுக்கொண்டு, அதன் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளேன். இதுபோல இருக்கக்கூடிய செயலிகளுக்கு முக்கியமான தேவை என்றால், அது சரிபார்க்கப்பட்ட துல்லியமான தகவல்கள்தான். அந்தத் தகவல்களைத் திரட்டுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பெரியார் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்றே தகவல்களைத் திரட்டினேன். தொடர் பேருந்து பயணம் செய்யக்கூடிய, வழித்தடத்தில் அனுபவமிக்க பயணிகள் மூலம் தகவல்களைப் பெற்று மென்பொருள்களின் உதவியோடு சரிபார்க்கப்பட்டு பயன்படுத்த என கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன." கல்லூரிப் படிப்பையும் செயலி உருவாக்கத்தையும் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்? ``ஒரு கல்லூரி மாணவராக படிப்பில் இருக்கும் ஆர்வம் அதிகம்தான். அதையும் தாண்டி கல்லூரி நேரத்திற்குப் பிறகு எனது சுயவிருப்பத்தின்படி, நான் சந்தித்த பிரச்னையை வைத்து உருவாக்கியதே இந்த மக்கள் பஸ் செயலி. அதனால் மேனேஜ் என்பதைத் தாண்டி ஆர்வம் அதிகமாக இருக்கிறது." இந்த மக்கள் பஸ் செயலியை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல உங்கள் திட்டம்? ``இந்த மக்கள் பஸ் செயலி இப்போதுதான் மதுரை மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதுவரையிலும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். அரசின் போக்குவரத்துத்துறையின் மூலம் உதவி கிடைத்தால் இந்தச் செயலில் ஜி.பி.ஸ் வசதியுடன் பேருந்தை டிராக்கிங் (Tracking) செய்ய முடியும், பேருந்திற்கான நேரமும் இந்தச் செயலியில் இருந்தால் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறுவர். அதைக் கொண்டுவருவதே அடுத்தக்கட்ட திட்டம். அடுத்த 2-3 ஆண்டுகளில் “மதுரையின் மிகச்சிறந்த ஸ்மார்ட் பஸ் கம்பேனியன் செயலியாக” என்னால் கொண்டு வர முடியும் என உறுதியாக நம்புகிறேன்." இந்தச் செயலி பற்றி மதுரை மக்கள் உங்களிடம் பகிர்ந்துகொண்டவை என்ன? ``மக்கள் பஸ் செயலி நன்றாக இருக்கிறது. எல்லோரும் எதிர்ப்பார்ப்பது பேருந்து நேரத்தையும், டிராக்கிங் வசதியையும்தான். செயலியில் ஓரிரு இடங்களில் பிழைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். விரைவில் மக்கள் சொன்ன அனைத்தையும் சரி செய்வோம்." கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு உங்கள் அடுத்தக்கட்ட திட்டங்கள் என்னென்ன? ``இந்தச் செயலி மூலமாகவே ஒன்றிரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொண்டன. அதனால் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு முழுநேரமாக செயலி உருவாக்கத்தைப் பற்றி மேலும் நிறைய கற்றுக்கொண்டு, மக்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயலிகளை உருவாக்க வேண்டுமென்பது எனது கனவு!" உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துகள் ராகுல்ராஜ் ஜெயராமன்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/technology/this-is-just-the-beginning-madurai-students-makkal-bus-app-guides-the-people



