சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை. புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி மேகதாது அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்; அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்; பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது. அதேபோல், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் எடுப்பதற்காக 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவது தேவையற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கூறி வருவதைப் போல, அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சி என கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப்பகுதி அதிகமாக இருப்பதால் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். ஏற்கனவே, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகரம், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இப்போது மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது தவிர ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 40 டி.எம்.சி நீரையும் சேர்த்து 225 டி.எம்.சி நீரை காவிரியின் குறுக்கே கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. அதனால் காவிரி பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகி விடும். மேலும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும். திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தேவையான அனுமதிகளைப் பெற்று 2027&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார். இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. கர்நாடகத்தில் 2028&ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2027&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அதையே பரப்புரையின் முக்கிய அம்சமாக மாற்றி, அரசியல் இலாபம் தேடலாம் என்பது தான் கர்நாடக காங்கிரசின் திட்டம். மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எதையெல்லாம் கணித்ததோ, அவையெல்லாம் நடந்து வருகின்றன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியப் போக்கைத் தொடரக்கூடாது. மேகதாது அணை கட்டப்படுவதையும், காவிரியில் தமிழக உரிமைகளை பாதுகாக்கவும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தரத் தவறினால், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும். அதற்கான பழியை காலம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சுமக்க நேரிடும். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும். அதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் டெல்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-project-report-for-mekedatu-dam-government-must-no-longer-remain-indifferent-anbumani-ramadoss



