கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்! சினி'ஸ்கோப் 08பிதாமகன்: அன்பின் ஈரம்! ”பெத்தவ புகையோடிப் போச்சே வளத்தவன் புகைகூட சொல்லாமப் போச்சே போடா உன் புகை மட்டும்தாண்டா என் கண்ணுல தண்ணி. கண்ணுல தண்ணிய காட்டிட்டுப் போச்சே…” என்று சக்தியின் சிதை நெருப்பின் முன்பாகச் சித்தன் ஒப்பாரி பாடியபடி கதறியழுகிறான். இதே போன்ற பாடல்களைத்தான் அவன் காலம் காலமாக பிறருக்காகப் பாடிக்கொண்டிருந்தான். அதில் அவனுக்கு எந்தவித உணர்ச்சியுமிருந்ததில்லை, வலியுமிருந்ததில்லை. சித்தன் பிறந்ததும், வளர்ந்ததும் அதே மயானக்காட்டில்தான். ஆதரவற்ற அவனது தாய், அவனை அங்கே பெற்றுப்போட்டுவிட்டு மரித்துப் போகிறாள். அங்கிருக்கும் வெட்டியானால் வளர்க்கப்படும் சித்தன், மனித உணர்வுகளிலிருந்து முற்றிலுமாக விலகியே வளர்கிறான். அவன் சிரிப்பதில்லை, அழுவதில்லை, யாரோடும் பேசுவதுமில்லை! தாயில்லாத தனிமை அவனை அந்த மனப்பிறழ்வு நிலைக்குக்கொண்டு போயிருக்கலாம். வளர்த்தவன் ஒருநாள் இறந்தபோதும் கூட, இப்படி ஓர் உணர்வற்றப் பாடலைப் பாடியபடியே, சித்தனால் அவனை எரியூட்ட முடிகிறது. அங்கே பிணங்கள் எரிந்துகொண்டிருந்த போது சலனமற்று உறங்கிடவும், சாப்பிடவும், விளையாடவும் முடிந்த சித்தனுக்கு இப்போது என்னவாயிற்று? ஏனிப்படி, இந்த சக்தியின் சிதைக்கு முன்பாக அழுது புரளுகிறான்? பிதாமகன் தன்னை வளர்த்த வெட்டியான் இறந்தபிறகு, உணவுக்காக ஊருக்குள் வருகிறான் சித்தன். ஊரே அவனை அருவருத்து ஒதுக்குகையில் கஞ்சா விற்றுப் பிழைக்கும் கோமதியின் அறிமுகமும், அன்பும் அவனுக்குக் கிடைக்கிறது. வெளியே வெடுக்கென்று பேசிப் பொரிந்து தள்ளும் கோமதி உண்மையில் எளியோர் மீது அன்பு கொள்ளுபவளாக இருக்கிறாள். அதனால்தான் அவளைப் போலவே விளிம்புநிலையிலிருக்கும் சித்தன், சக்தி மீதெல்லாம் சட்டென அவளால் ஒரு நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது. ஒருவேளை உணவு தந்ததுக்கே நன்றியோடிருக்கும் சித்தனைப் புரிந்துகொள்ள அவள் முயலுகிறாள். பிழைப்புக்காக அவள் சேர்த்துவிட்ட வேலையின் விளைவாக ஒரு சமயம் சிறைக்குச் செல்கிறான் சித்தன். அங்கே அவன் சக்தியைச் சந்திக்கிறான். வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச்சின்ன ஏமாற்று வேலைகளைச் செய்து போலீஸில் மாட்டிக்கொண்டு உள்ளே வந்திருக்கிறான் சக்தி. கலகலப்பான சக்தி, சித்தன் மீது காட்டும் அன்பும், பரிவும், சித்தனின் தாழிட்டுக்கிடந்த மனதின் கதவுகளைத் தட்டுகிறது. அவனும் பிறரைப் போன்ற மனிதனாவதற்கான கூறுகள் வெளிப்படுகின்றன. தன்னைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனக்காக அவன் தண்டனையையும் பெற்றதை உணர்கிறான். மேலும் சக்தி, சித்தனைப் பார்த்துப் பயப்படுவதில்லை, அவனைச் சரிசெய்ய முயற்சிப்பதில்லை, அவன் வித்தியாசமாக இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். இதெல்லாமும் சித்தனை அசைத்துப் பார்க்கின்றன. சிறையிலிருந்து வெளியே வரும் சக்தி, யாருக்காக சித்தன் உள்ளே போனானோ, அவனையே சந்தித்துச் சித்தனை வெளியே கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ளுகிறான். ஆனால், அதன் தொடர்ச்சியும், பிடிவாதமும் ஒரு கட்டத்தில் அவனது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. கொல்லப்படுகிறான். அப்போதும்கூட சித்தனின் உணர்ச்சிகள் வெளிப்படவில்லை. அவனை ஆதரித்துவந்த கோமதியே அந்தத் துக்கத்தின் உச்சத்தில், கல்லாக இருக்கும் சித்தனை, துடைப்பத்தால் அடித்து விரட்டுகிறாள். ஆனால், சக்தியின் சிதைநெருப்பு முதன் முறையாக அவனது மனதை வாட்டியெடுத்துவிடுகிறது. உடைந்து அழுகிறான். அடங்கிக்கிடந்த அவனது உணர்ச்சிகளெல்லாம் பீறிட்டு வெளிப்படுகிறது. அதுதான் இந்தக் கதையின் முடிவு. அதன்பின் என்னவாகிறது என்பது சினிமாவின் முடிவு. சித்தனாக விக்ரமும், சக்தியாக சூர்யாவும் நடித்திருந்தனர். இருவருக்குமே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவுடன் ஒரு மிகப்பெரிய தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. ஹீரோவாக நடிக்க வந்து சுமார் 5 ஆண்டுகளாக திணறிக்கொண்டிருந்த சூர்யாவை, ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்படுத்தி, அவரது திரைப்பயணத்தைத் திருத்தியமைத்தது பாலாவின் இரண்டாவது படமான நந்தாதான். முன்னதாக சூர்யாவின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும்படியாக, விக்ரமின் நிலை இருந்தது. 1990-ல் ’என் காதல் கண்மணி’ எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமான பின்னரும், விக்ரம் சரியான ஒரு வெற்றி அமையாமல், சுமார் 10 வருடங்கள் எத்தனையோ படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களிலும், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது திரைவாழ்வை அப்படியே புரட்டிப்போட்டது, இதே பாலாவின் முதல் படமான 1999-ல் வெளியான, சேது. அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே வந்த இந்த பிதாமகன், விக்ரமுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்து ஒரு தேர்ந்த நடிகராக அவரை நிலைநிறுத்தியது. ஏற்கனவே, சேதுவின் வெற்றிக்குப் பிறகு தில், தூள் என்று வெற்றிகளைக் கொடுத்து கமர்ஷியல் சினிமாக்களிலும் விக்ரம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சரியான பாத்திரம் அமையும் போது, ஒரு நடிகன் அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் உதாரணமாக சேது மற்றும் பிதாமகன் படங்களைச் சொல்லலாம். விக்ரம் நடை, உடை, பாவனை, பார்வை என எல்லாவற்றிலுமே சித்தனாகவே மாறியிருந்தார். தொடக்கத்தில் எதற்கும் அசைந்துகொடுக்காத தன்மையையும், பின்னர் கோமதியும், சக்தியும் அதை மெல்ல மெல்ல உடைக்கும் போது ஏற்படும் மாற்றத்தையும் மிகச் சரியாக வெளிப்படுத்தியிருந்தார். கன்னத்தில் முத்தமிட்டால்: தாயின் பாடல் | அமுதாவின் கேள்விக்கு பதில்? | `சினி'ஸ்கோப் 05 இதற்கு சற்று முன்னதாக வெளியான, காக்க காக்க எனும் படத்தில் ஒரு கம்பீரமான காவலதிகாரியாக வந்த சூர்யா, இதில் ஒரு சீட்டராக, எளிமையான கிராமத்து ஆளாகக் காண்பித்த வித்தியாசம் பெரிதும் பாராட்டப்பட்டது. இவர்களை விடவும் அதிக நேரம் வரக்கூடிய முக்கியமான ஒரு பிவோட்டல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சங்கீதாவும் குறிப்பிடப்பட வேண்டியவர். அன்பும், நெகிழ்ச்சியுமாக சங்கீதா சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், லைலா, கருணாஸ், மனோபாலா போன்றோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ். ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம். மயானக்காடு, கஞ்சாத் தோட்டம், சிறைச்சாலை என இந்தப் படம் நகரும் எல்லா இடங்களும், வெறும் பின்னணிகளாகத் தோன்றுவதில்லை. அந்த நிலப்பரப்பின் வறட்சியும், முரட்டுத்தன்மையும், எளிமையும் கதாபாத்திரங்களின் இயல்போடு ஒன்றிப்போய் இருந்தது படத்தின் நம்பகத்தன்மைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது. `ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு!' அன்பே சிவம்: நிகழும் உரையாடல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 06 இசை இசைஞானி இளையராஜா. பின்னணி இசையும், பாடல்களும் உணர்வுக் குவியலாக அமைந்திருந்தன. மயானத்தில் ஒரு குழந்தை, தாயின் மரணத்தோடு பிறக்கிறது. அங்கே ஒரு பாடல் தொடங்குகிறது. ’பிறையே பிறையே வளரும் பிறையே… இது நல்வரவே!’ இடம் எதுவானாலும், சூழல் எதுவானாலும் இது உலகு, அது ஓர் உயிர்! வரவேற்கப்பட்டே ஆகவேண்டும். அந்தப் பாடலைப் பாடியது மது பாலகிருஷ்ணன். எழுதியது வாலி. இவர்களின் வாழ்க்கையிலும் கொஞ்சமாக மகிழ்ச்சி இருக்கிறது, கொஞ்சமாகக் காதல் இருக்கிறது. காட்டுக்குள் கஞ்சா வளர்க்கும் யாரோ ஒருவன் வந்து கலைத்துப் போடாமலிருந்தால் இவர்களின் வாழ்க்கையும் நம்பிக்கையும், அன்பும் கொண்டு உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது எனும் இடத்தில் வரும் பாடல், ’இளங்காத்து வீசுதே, இசை போல பேசுதே…’ இதைப் பாடியது ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷல். பாடலை எழுதியது பழநிபாரதி. படத்தின் சிறப்புக்கு ஒரு திருஷ்டிப்பொட்டாக, கதைக்கும், அதன் இயல்புக்கும் சம்பந்தமின்றி ஒரு பாடல் வருகிறது. நடிகை சிம்ரனைக் கடத்தி வந்து கிராமத்தினர் முன்பாக ஒரு பாடலுக்கு ஆட வைக்கிறார் சக்தி. அந்தப் பாடல் தொடங்கும் முன்பாக, ‘நீ மட்டும் ஒரு டான்ஸ் ஆடிப்பாரு, அடுத்த எலக்சன்ல உன்னை மந்திரி ஆக்கறோமா இல்லையானு பாரு’ என்று பல்லு போன கிழவி ஒருத்தர் சிம்ரனைப் பார்த்துச் சொல்லுவது, நமது சிந்தனையை வேறெங்கோ கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. எவர்கிரீன் சினிமாஸ்க்காக, பி. ஏ. துரை தயாரிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தது பாலா. பாலாவின் படங்களில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் இயல்பான மனிதர்களாக அல்லாமல், அதன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மனநல பாதிப்புக்காளாகும் சேது, மயானத்தில் பிறந்து வளர்ந்த சித்தன், யாசகர்களோடு வாழும் கண் தெரியாத அம்சவல்லி, காசியின் சாமியார்களிடையே பெற்றோர்களால் கைவிடப்பட்ட ருத்ரன், தேயிலைத்தோட்ட அடிமை என அவர்கள் ஒவ்வொருவரும் சமூக வாழ்விலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இப்படியான விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிப் பேசும்போது தமிழ் சினிமா பெரும்பாலும் இரண்டு வேலைகளைத்தான் செய்திருக்கிறது. ஒன்று அவர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது; இரண்டு அவர்களைப் பரிதாபத்துக்குரியவர்களாகக் காட்டுவது. பாலா அந்த இரண்டையும் உடைத்தார். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மனிதர்களுக்கும் அன்பு இருக்கிறது, கண்ணீர் இருக்கிறது, உறவுக்கான ஏக்கம் இருக்கிறது என்பதைத் தனது கதைகளின் வழியாகச் சொன்னார். அந்த வகையில், சித்தன் நிச்சயமாக தனித்துவமான ஒரு பதிவு. ஒரு சூழல் எந்த அளவுக்கு ஒரு மனிதனை இறுக்கமானவனாக ஆக்குகிறது என்பதையும், அவனையும் உடைத்து மனிதனாக்கும் உணர்வு எது என்பதையும் இந்தப்படத்தில் ஆழமாகப் பேசியிருந்தார். விக்ரம் நடிப்புக்காக தேசிய விருதை வென்ற நிலையில், தமிழ்நாட்டு அரசு மற்றும் ஃபிலிம்பேர் விருதுத் தேர்வுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்ற பல வகைமைகளிலும் விருதுகளைக் குவித்தது இந்தப்படம். சக்தியை இழந்த பின்னர், மீண்டும் மனிதர்களின் மீதான நம்பிக்கையை இழந்து, தன் மனக்கதவுகளை மூடிக்கொள்கிறான் சித்தன். அந்த ஊரிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் விலகி ஓடுகிறான். அந்த இறுதிக் காட்சி மொத்தப் படத்தில் உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது. அவன் அந்த ஊருக்குள் வரும் போது மனித உணர்வுகளை அறியாதவனாக வந்தான்; இப்போது அவற்றின் வலியையும் சுமந்துகொண்டு வெளியேறுகிறான். அன்பு, இழப்பு, கண்ணீர் போன்றவற்றின் பாரம் இப்போது அவனுக்குத் தெரியும். பிணங்களை எந்த உணர்வுகளுமின்றி எரித்துக்கொண்டிருந்த சித்தன் அதை இனி ஒருபோதும் செய்யமுடியாது. (தொடரும்) காக்க காக்க: காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 07 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/a-cinema-series-on-classic-cinema-part-8-pithamagan




