சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும். நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா? மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா? சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா? முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா? கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்? நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா? மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-questions-the-need-for-a-separate-budget-statement-when-government-schemes-are-announced-under-rule-110



