சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும். தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மை இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 01.01.2025-ம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு 132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம் & ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 முதல் 4,000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3,359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2023-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில்தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை. அதன்பின் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான். தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18 - 26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும். காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகாததால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின் அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது. 2025-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-notification-should-be-published-immediately-anbumani-ramadoss




