``கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதிய உயர்வு வெட்டுடன் பணியாற்றி வரும் ஆசிரியை உமா மகேஸ்வரி மீது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை, தவெக அரசு கைவிட வேண்டும்" என்று மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி மக்கள் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் இரா.முரளி, வீ.அரசு, சிவக்குமார், கல்வியாளர் கண குறிஞ்சி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லிக்குப்பம் அரசுப்பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி முகநூலில் கல்வி குறித்து கருத்துக்கள் பதிவிட்டதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வெட்டு எனும் கடும் தண்டனையத் தந்துள்ளது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடமும், அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸிடம் முறையிட்டும் நீதி மறுக்கப்பட்டது. சமூக அக்கறையுடன் அன்றாடம் கல்விக் கூடத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் அடிப்படையிலும், அடித்தட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டு வழிகள் குறித்த அக்கறையிலும், தரமான கல்விக் கூடங்கள் உருவாக்குதல் என்ற கண்ணோட்டத்தையும் கொண்டு ஆசிரியர் உமா மகேஸ்வரி பொது வெளியில் கருத்துக்கள் பதிவிட்டதை, அரசுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டி கடந்த தி.மு.க அரசு அவருக்குக் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது. பேராசிரியர் முரளி 76-வது சுதந்திர தினத்தின்போது சிறந்த ஆசிரியர் என்று உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு ஆட்சியர் மூலம் விருது வழங்கி பாராட்டிய தமிழக அரசே, 2025 சுதந்திர தினத்தன்று மூன்று ஊதிய வெட்டு எனும் தண்டனை அளித்திருப்பது சிறிதும் நியாயமற்றது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தை மாணவர்கள் மகிழ்வாகப் படிக்கும் வகையில் எழுதியதற்காக ஆசிரியர் உமா மகேஸ்வரியைப் பாராட்டுகிறோம் எனச் சான்றிதழ் வழங்கிய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்களே, இப்போது 17 பி விதியின் அடிப்படையில் குறிப்பாணை வழங்கியது அறமற்றதாகும். உமா மகேஸ்வரி பன்முகத்தன்மையுடன் செயலாற்றி வரும் ஆசிரியைக்கு, அவரைப் பாராட்டிய இதே நிர்வாகம் 6.3.24 அன்று அவர் பணியாற்றும் நெல்லிக்குப்பம் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும், மாவட்டக் கல்வி அலுவலரையும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அனுப்பி, பள்ளி தலைமை ஆசிரியர் அறைய பூட்டி வைத்து, விசாரணை என்ற பெயரில் "ஏன் முகநூலில் எழுதுகிறீர்கள்? நாளிதழ்களில் எழுதுகிறீர்கள்?" என மிரட்டும் தொனியில் பேசி, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதையும், இடைநீக்கம் செய்ததையும் பலரும் அறிவர். பள்ளிக்கல்வி மேலும் வற்புறுத்தி அவருடைய கல்வி குறித்த முகநூல் பதிவுகளை அப்போதே நீக்கச் செய்திருக்கின்றனர். இப்படி வலுக்கட்டாயமாக அவர்கள் செயல்பட்டது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. அதைக் கண்டித்துப் கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள, முற்போக்கு இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின்னர் இடைநீக்கம் மட்டுமே விலக்கப்பட்டது. ஆனால் 6.3.24 தேதியிட்ட மாவட்டக் கல்வி அலுவலர் கடிதத்தில் அரசு ஊழியர் நடத்தை விதி 12-ஐ உமா மகேஸ்வரி மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதாவது ஆசிரியர் உமாமகேஸ்வரி புலனம் வழியாகவும், முகநூல் வழியாகவும் அரசு ஊழியர்கள் உணர்வுகளைத் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், கல்வித்துறைக்கு எதிராகவும் தூண்டினார் என்றக் குற்றச்சாட்டைக் கூறி ஊதிய வெட்டுக்கான அடித்தளத்தைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கட்டமைத்தனர். ஆசிரியர் உமா மகேஸ்வரி அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கும், குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறை குறித்தும், ஆசிரியர் பணி சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் "அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்பு " வழியாக விவாதித்துக் கோரிக்கைகளைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து முகநூலில் எழுதியுள்ளார். இதைக் குற்றமென பள்ளிக் கல்வித்துறை கருதுவது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதிய உயர்வு வெட்டுடன்தான் மாத ஊதியம் பெற்று வருகிறார். எனவே கடந்த திமுக ஆட்சியில் நடந்த பழிவாங்கும் நடவடிக்கை யை கைவிடக் கோரி மக்கள் கல்விக் கூட்டியக்கம் தற்போதைய தவெக அரசிடம் வேண்டுகோள் வைக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது குறித்துக் கவனம் செலுத்தி ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை விலக்கி நியாயம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/education/school-education/educationalist-requests-tamilnadu-government-to-revoke-the-action-taken-against-teacher-uma-maheshwari




