சென்னை, கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான தம்பதியை வரும் 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரெயிலில் மனித உடல் பாகங்கள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள்(5-ந்தேதி) ஆக்ரா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது. அப்போது அந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஒரு பையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அங்கிருந்த பயணிகள் கவனித்தனர். மேலும் அந்த பையில் இருந்து ரத்தம் கசிந்ததால் உடனடியாக ரெயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் தலை உள்பட பல்வேறு பாகங்கள் இல்லாமல் இருந்தன. அதே சமயம், சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பெயரைக் கொண்ட பிளாஸ்டிக் கவர் அந்த பையில் இருந்தது. சென்னையில் விசாரணை இதன் மூலம், அதிகாரிகளின் விசாரணை சென்னையை நோக்கி திரும்பியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த பையை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த ஜோடி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி, பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பிரியாணி அண்டாவில் மனிதக்கறி இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தேடிக் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரையும் எந்த வீட்டில் இறக்கிவிட்டார் என்பதை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் போலீசார் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அந்த வீடு முழுவதும் ரத்தக்களறியாக காட்சியளித்தது. அதோடு, மனித உடல் பாகங்களை பிரியாணி அண்டாவில் போட்டு, மைதா மாவு மற்றும் காய்கறிகள் சேர்த்து வேகவைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா என்ற பெண் ஆகிய 3 பேர் வாடகைக்கு குடியிருந்தனர் என்பது தெரியவந்தது. சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி இருப்பது மாணிக் உத்தின் லஸ்கர்-பகமதி மாஜி தம்பதியினர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது ஹைதுல் நிஷாவின் உடல் பாகங்கள்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர். கடந்த மாதம் 29-ந்தேதி, மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற காவல் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யூடியூப் பார்த்து கொலையை அரங்கேற்றியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவரும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மாணிக் உத்தீன் லஸ்கர் - பகாபதி மாஜி தம்பதியை வரும் 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-cooking-human-flesh-in-a-biryani-cauldron-arrested-couple-remanded-to-judicial-custody-until-the-16th




