உலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் அல்லது. கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இதையடுத்து மனிதர்களுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தி சோதனை செய்யும் நடைமுறைகள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. இதில் அதிக அளவில் பன்றியின் சிறுநீரகம், இருதயம் போன்றவை இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பன்றியின் சிறுநீரகம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் கிடைக்க தாமதம் ஏற்படும் பட்சத்தில் மாற்று சிறுநீரகம் கிடைக்கும் வரை மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது. இதன் மூலம் டயாலிசிஸ் தொல்லையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற முடியும். அமெரிக்காவை சேர்ந்த 66 வயதாகும் டிம் ஆண்ட்ரூஸ் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மாற்று சிறுநீரகம் மட்டுமே தீர்வாக முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். ஆண்ட்ரூஸ் ஆனால் மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண்ட்ரூஸிற்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர் டயாலிசிஸ் செய்யாமல் 271 நாட்கள் எந்த வித பிரச்னையும் இன்றி பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்தார். இறுதியில் பன்றியின் சிறுநீரகம் செயலிழந்ததால், மருத்துவர்கள் அதை அகற்றினர். இதன் மூலம் ஆண்ட்ரூஸ் தற்காலிகமாக டயாலிசிஸுக்குத் திரும்பினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த ஒருவரின் சிறுநீரகத்தை தானமாக பெற்றார். மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் நடந்த இந்த சிகிச்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உயிருள்ள ஒருவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி-சிறுநீரகம் மிக அதிக நாள் டயாலிசிஸ் இல்லாத ஒரு வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது. அதோடு இத்தகைய மாற்று அறுவை சிகிச்சையானது அடுத்தடுத்த மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பன்றியின் சிறுநீரகம் பாலமாக செயல்படும் என்பதையும் நிரூபிக்கிறது. அதேசமயம் இந்த சிகிச்சையானது பன்றியின் சிறுநீரகங்கள் மனித சிறுசீரகங்களுக்கு மாற்றாக அமையும் என்று அர்த்தமல்ல. பல தசாப்தங்களாக மனித உடல் பன்றியின் சிறுநீரகங்களை நோயெதிர்ப்பு நிராகரிப்பு, வைரஸ் தொற்று அபாயங்கள் மற்றும் உறுப்பின் ஆயுட்காலம் ஆகிய காரணங்களால் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. எனவே தற்போது நடந்துள்ள இந்த சிகிச்சை மிகவும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏன் பன்றியின் சிறுநீரகம்? மற்ற எத்தனையோ விலங்குகள் இருக்கும்போது பன்றியின் உறுப்புகள் ஆய்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அவற்றின் அளவு மற்றும் உடலியல் அமைப்பு ஆகியவை மனித மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்பீட்டளவில் பொருத்தமானதாக இருக்கிறது. அதேசமயம் மனித நோயெதிர்ப்பு அமைப்பு இதற்கு தடையாக இருக்கிறது. அது பன்றி உறுப்பை வெளியில் இருந்து வந்த உறுப்பாக கருதி நிராகரிக்கிறது. இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிறுநீரகம் 69 மரபணு மாற்றங்களை கொண்டிருக்கிறது. மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்படுவதற்குக் காரணமான, பன்றியின் மூன்று முக்கிய கிளைக்கன் ஆண்டிஜென்கள் நீக்கப்படுகிறது. பன்றியின் உறுப்பு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் எளிதாகப் பொருந்திச் செயல்படுவதற்காக ஏழு மனித மரபணுக்குள் உள்ளே செலுத்தப்பட்டன. மேலும், பன்றியிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காகப் பன்றியின் எண்டோஜென்ஸ் ரெட்ரோவைரஸ்கள் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இதற்கு முன்பும் மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சோதிக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக 2024ம் ஆண்டு மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகத்தை உயிருள்ள ஒரு மனிதருக்கு பொருத்திப் சாதனை படைத்தது. அந்த நோயாளி, சிறுநீரகத்துடன் சம்மந்தப்படாத இதய கோளாறு காரணமாக பன்றி சிறுநீரகத்துடன் 52 நாட்கள் உயிர் வாழ்ந்து இறந்தார். அவர் உயிரிழந்த அந்த நேரத்திலும் பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகம் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/man-who-survived-with-a-pigs-kidney-receives-a-human-kidney-after-271-days




