சென்னை, ‘புதுப் பானையில் பழைய சோறு' என்று தமிழக பட்ஜெட்டை எஸ்டிபிஐ கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான முதல் மாநில பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே அளிக்கிறது. நிதிநிலை அறிக்கை அதேவேளையில், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சாதகமான அம்சங்களை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. குறிப்பாக, புதுமணப் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய 'TN சுடர்' ஒருங்கிணைந்த நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டம், ரூ.50 கோடியில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான 'சேவை உரிமைச் சட்டம்' போன்ற அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை. இருப்பினும், இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய பெருமளவிலான குறைகளும் ஏமாற்றங்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பான அறிவிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மேலும், தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முதியோர் உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற எந்தவொரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இது தவிர, பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4,007 கோடி நிதி குறைக்கப்பட்டு, ரூ.44,527 கோடியாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஏற்கனவே ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.560 கோடி நிதியானது, மாநிலத்தின் தற்போதைய அரசு மருத்துவமனை பிறப்பு விகிதக் கணக்கீட்டின்படி போதுமானதாக இல்லை. அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது குறித்தோ, புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ எந்தவொரு தெளிவான திட்டமும் இதில் இல்லை. 'புதுப் பானையில் பழைய சோறு' என்பது போல, முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி விளம்பரம் செய்வதால் மட்டுமே மக்களின் பசி ஆறிவிடாது. வலியுறுத்தல் ஆகவே, வெறும் 3 மாத கால ஆட்சியில் சாதனைகள் செய்துவிட்டதாகக் கூறும் தவெக அரசு, பட்ஜெட்டில் வெறும் பெயர் மாற்றங்களாலும் கவர்ச்சி அறிவிப்புகளாலும் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை உணர வேண்டும். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு உடனடியாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/old-rice-in-a-new-pot-stbi-criticizes-tamil-nadu-budget




