சென்னை, கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு காரணம் போதைப்பொருள் புகாரா? அல்லது முன் பகையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “கோவை அருகே கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட காவல்துறை விசாரணையின்படி, மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பகைக் காரணமாக அமுதன் தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்புக் கூறுகிறது. ஆனால், இந்த வழக்கில் இன்னொரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமுதன் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்ததாகவும், அந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்ததன் காரணமாகவே அமுதன் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, போதைப்பொருள் குறித்து அமுதன் தகவல் அளித்தார் என்பதும், அந்தத் தகவல் கசிந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்பதும், தற்போது குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. அவை விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை. அதேவேளையில், காவல்துறை போதைப்பொருள் தொடர்பான காரணத்தை மறுத்து, மாணவர்களுக்கிடையேயான மோதலே முதற்கட்ட விசாரணையில் தெரியவரும் காரணம் எனக் கூறுகிறது. எனவே, இந்த வழக்கில் ஒரு கோணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு விசாரணையை முடித்துவிடாமல், இரு கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, அமுதன் காவல்துறைக்கு போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்தாரா? அவ்வாறு தகவல் அளித்திருந்தால், அவரிடம் காவல்துறை எப்போது, எந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தியது? அவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல் யாருக்கெல்லாம் சென்றது? காவல்துறையிலிருந்து தகவல் கசிந்ததா? கல்லூரி மற்றும் விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனைத் தொடர்பான புகார்கள் ஏற்கெனவே இருந்தனவா? அமுதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அவரை யாராவது மிரட்டினார்களா? செல்போன் பறிப்பு மற்றும் முன்பகைத் தொடர்பான காவல்துறை கூறும் சம்பவத்திற்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? தாக்குதலில் பங்கேற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனரா? என்பவைத் தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும். அமுதன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது எந்த அரசியல் அழுத்தத்திற்கும், எந்த முன்முடிவிற்கும் இடமின்றி ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் இருந்திருந்தால், அது ஒரு மாணவரின் உயிரை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையின் எதிர்காலத்தையே பாதிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். அதேபோல், ஒரு மாணவர் காவல்துறைக்கு இரகசியத் தகவல் அளித்ததற்காகக் குறிவைக்கப்பட்டிருந்தால், தகவல் அளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் பொறுப்பும் கேள்விக்குள்ளாகிறது. எனவே, அமுதன் மரணத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், கொலைக்குப் பின்னால் வேறு சதி, தூண்டுதல் அல்லது தகவல் கசிவு இருந்தால் அதற்குக் காரணமான அனைவரும் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமுதனுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மை முழுமையாக வெளிவர வேண்டும். அதோடு, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-the-full-truth-must-be-revealed-velmurugan



