புதுடெல்லி, முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக திமுக தெரிவித்தது. இதனால் திட்டமிட்டபடி முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வது உறுதியாகி உள்ளது. விஜய் மக்கள் சந்திப்பு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை. இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா ரூ.20 லட்சம் த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். அதன் பின்னரும் சி.பி.ஐ. விசாரணை தொடருகிறது. விஜய் கரூர் பயணம் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர், கரூர் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இடையீட்டு மனு இந்த நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழி காட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. கரூர் வழக்கில் தி.மு.க.வுக்கு பேரதிர்ச்சி- சரமாரியாக விளாசிய சுப்ரீம்கோர்ட்டு இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கரூர் வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் குற்றம் சாட்டப்பட்டவர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் உள்ளது’ என வாதிட்டார். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், திமுக ஆட்சியில் பதிவான வழக்கில் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை என்று கூறினர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சுப்ரீம்கோர்ட்டை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். உங்கள் சண்டைகளை கோர்ட்டுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள். அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தால் பதிலுக்கு திமுக தரப்பும் பேசிக்கொள்ளுங்கள். முதல்-அமைச்சருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? உதவிகள் வழங்குவது எப்படி சாட்சியங்களை கலைப்பதாகும்? விஜய் கரூர் செல்ல தடையில்லை முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல தடையில்லை. முதல்-அமைச்சரின் பேச்சு கருத்து சுதந்திரம். முதல்-அமைச்சரின் பேச்சை சுப்ரீம்கோர்ட்டு கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது எப்படி விசாரணையை பாதிக்கும்? கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். மேலும் தயவுசெய்து ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு கோர்டில் பேசுங்கள் என திமுக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மனுவை வாபஸ் பெற்ற தி.மு.க. இறுதியில், கரூர் வழக்கில் தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இடையீட்டு மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யவா? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தி.மு.க. தெரிவித்ததை அடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி உள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் இந்த சாதகமான பதிலால் முதல்-அமைச்சர் விஜய் வரும் 10-ம்தேதி (வெள்ளிக்கிழமை) கரூர் செல்வது உறுதியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/as-planned-chief-minister-vijay-is-visiting-karur-this-coming-friday




