Vollständiger Artikel
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கல்லூரிப் பருவம் என்பது சிறுவர்கள் என்கிற பதவியினைத் துறந்து, ஆயுள் முழுக்க தனக்கும் வாரிசுகளுக்கும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் நிதிக்குக் குறைவில்லாத குடும்ப வாழ்க்கைப் பயணத்திற்கான பாதையினை அமைத்துக் கொள்ளக்கூடிய பருவமாகும். இப்பருவத்தில் மூளை முதிர்ச்சியடைந்து புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதால் உணவு மற்றும் விளையாட்டு முறைகளை பறிமாறிக் கொள்வது போன்று நண்பர்களை உருவாக்கி ஒருவருக்கொருவர் தங்களது அறிவுசார்ந்த விழுமியங்களையும் பரிமாற்றம் செய்து ஆளுமையினை மேம்படுத்துவதற்கு ஏற்ற இடம்தான் கல்லூரி. இவ்வாறு பெற்றுக்கொண்ட ஆளுமைகளின் மூலம் சமூகம், வணிகம், பொருளாதாரம் போன்றத் துறைகளைச் சீரமைக்கும் வலிமையை உணரும் – உணர்த்தும் பருவமாகும். முதிர்ச்சியின் தொடக்கம்: மூளையின் உச்சக்கட்ட வளர்ச்சி 18-வது வயது என்பது சட்ட விதிகளின்படி ஒரு மனிதன் சுயமுடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் பருவம். அறிவியல் பூர்வமாக, மனித மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் நிறைவடைந்து, சிந்திக்கும் திறன் உச்சத்தை எட்டும் காலம் இது. எனவே, கல்லூரிப் பருவம் என்பது வெறும் பட்டங்களையும் வேலைவாய்ப்பினையும் பெறுவதற்கான காலம் மட்டுமல்ல; எதனையும் பலமுறை ஆழ்ந்து யோசித்து, முதிர்ச்சியுடன் முடிவெடுக்கும் பொறுப்பான காலமாகும். இன்று சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் சாதித்து நிற்கும் சான்றோர்கள் அனைவரும், இப்பருவத்தில் தங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழுமூச்சாகத் தங்களை அர்ப்பணித்தவர்களே ஆவர். பன்முகத்தன்மையின் சங்கமம்: ஒரு வாழ்வியல் தோப்பு கல்லூரி என்பது பல வகையான மரங்களைக் கொண்ட ஒரு தோப்பு போன்றது. இது பூக்கள் பூத்து, கொத்துக் கொத்தாகக் காய்த்து, கனிகளைத் தரும் பருவம். வெறும் கிளைகளாக வளர்வது மட்டும் வளர்ச்சியல்ல; அந்தக் கனிகள் எவ்வளவு பருத்து, சத்துடன் தரமானதாக இருக்கிறதோ, அதை வைத்தே ஒரு மரத்தின் 'மதிப்பு' நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல, ஒரு மாணவன் வெறும் பட்டதாரியாக மட்டும் வெளியேறுவது வெற்றியல்ல; அவன் எந்தளவுக்கு அறிவிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும் 'சத்தான' மனிதனாக முதிர்ச்சியடைகிறானோ, அந்தளவுக்குச் சமூகத்தில் அவனது மதிப்பு உயரும் என்பதே. அறிவு மற்றும் அனுபவப் பரிமாற்றம்: பகிர்வின் வலிமை பள்ளிகள் வழியே கல்லூரி பாரம்பரியத்தில், மதிய உணவைப் நண்பர்களுக்குள் பகிர்வது வெறும் உபசரிப்பு மட்டுமல்ல, அது 'பகிர்வு' எனும் வாழ்வியல் பாடம். பாடங்கள் புரியாத நண்பனுக்குத் தன் அறிவைப் பகிர்ந்தளிப்பது, குழு விளையாட்டுகளில் தெரியாதவர்களுக்குக் கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்துவது என இப்பகிர்வு தொடரும். அப்போதுதான், அறம் சார்ந்த நட்பு மலர்கிறது. தான் கற்றவற்றை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களையும் மிகுந்தஅறிவு மிக்க மாணவர்களாக மாற்றுவதே உண்மையான கல்வி. தங்களுக்குள் இருக்கும் அறிவையும், தனித்திறமைகளையும் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான மிகச்சிறந்த தளம் இது. எந்த ஒரு திறமையும் மற்றவர்களுடன் பகிரப்படும்போதுதான் அது முழுமை பெறுகிறது. 2.காலத்தால் அழியாத நட்பின் இலக்கணம் சாதித்த சான்றோர்களிடம் அவர்களின் கடந்து வந்த பாதையைக் கேட்டறிந்தால், நண்பர்களின் துணை இன்றி எவரும் உயரவில்லை என்பது நிதர்சனம். நமது முன்னோர்கள் நட்பின் முக்கியத்துவத்தை ஆழமாகவும் அழகாகவும் கூறியுள்ளனர்: நட்பின் ஆழம்: "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு" என்கிற திருக்குறளுக்கு ஏற்ப இக்கட்டான நேரத்தில் உதவிக்கு வரும் நட்பே உண்மையானது. நல்லினம்: "நல்லினத்தி னூங்குந் துணையில்லை" என்னும் வள்ளுவரின் வாக்கின்படி தங்களைச் செதுக்கிக் கொள்ளும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதே இப்பருவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். எச்சரிக்கை: கூடா நட்பு மற்றும் எதிர்கால வாழ்வு "கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதற்கிணங்க, இன்று பல இளம் பெற்றோர்கள் தாங்கள் கல்லூரிப் பருவத்தில் செய்த தவறுகளால் விளைந்த கசப்பான இன்னல்களை இன்றும் அனுபவித்து வருகின்றனர். அந்தத் துயரத்தின் வலியைத் தாங்களே உணர்ந்திருப்பதால்தான், தங்கள் பிள்ளைகள் அதே சுவட்டில் தவறிழைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பெற்றோர் அவ்வப்போது கடிந்து கொள்கிறார்கள். எனவே, பிள்ளைகள் பெற்றோரின் இந்தக் கண்டிப்பைத் தங்களுக்குத் தடையாகவும் அடிமைத்தனமாகவும் கருதாமல், அவர்கள் பட்ட கஷ்டங்களை மீண்டும் தாங்கள் படக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு கோபத்துடன் செயல்படுகிறார்கள் என்ற முதிர்ச்சியை, நற்பண்புகள் நிறைந்த தனது நட்பின் மூலமாகப் புரிந்துகொண்டு, அந்த வழிகாட்டல்களை நன்றியோடு ஏற்றுக்கொள்வதே ஒரு மாணவனுக்கு அழகு. சிற்பி செதுக்கும் காலம்: வாழ்வின் திசைவழி ஒரு சிற்பி கல்லைச் செதுக்குவது போல் மாணவன் தன்னைத் தானே கவனம் சிதறாமல் செதுக்கும் காலம். இந்த வசந்த காலத்தில் நாம் தேர்வு செய்யும் நட்பு, வளர்த்துக்கொள்ளும் ஒழுக்கம் மற்றும் ஈட்டும் அறிவு ஆகியவை அனைத்தும் இணைந்துதான் நல்ல மனிதனான சான்றோனை உருவாக்குகிறது. உயிருள்ளவரை இன்பமா? அல்லது துன்பமா? என வாழப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அடித்தளம் இந்த கல்லூரிப் பருவத்தில்தான் இடப்படுகிறது. பதற்றம், கோபம், சோகம், எரிச்சல், காதல், சந்தோஷம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் போலியான காட்சிப் பிம்பங்களுக்கு அடிமையாவது "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைப்பதற்குச் சமம்" என்பதை மாணவர்கள் உணரக்கூடிய காலம் என்றும் வலியுறுத்தலாம். சுயசுத்தம்: வாழ்வின் அடிப்படைத் தத்துவம் சமையலுக்கு முன் காய்கறிகளையும் அதனை சமைக்க உதவும் பாத்திரங்களையும் சுத்தமாக இருப்பதற்கு முன்னுரிமை கொடுத்து சுத்தமான நீரில் கழுவுகிறோம். ஏனெனில், அழுகிய காய்களை அழுக்குப் படிந்த பாத்திரத்தில் சமைத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரைக் குடிக்கும் அளவிற்குச் சென்று விடும். அதுபோல, அறிவைப் பெறுவதற்கு முன் மனதின் அழுக்குகளை அகற்றுவது அவசியம். தீய சிந்தனைகள் படிந்த மனத்தில் கல்வி நிலைக்காது. உடல் தூய்மை என்பது மனத் தெளிவின் தொடக்கம். நல்ல மனதுடைய அம்மாக்களைக் கொண்ட சமையலறையும் நல்லாசியர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் கல்லூரியும் ஒன்றே. வேற்றுமையில் ஒற்றுமை கல்லூரிப் பருவம் என்பது வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்கும் காலம் அல்ல; மனிதர்களின் பன்முகத்தன்மையையும், வாழ்வின் எதார்த்தத்தையும் புரிந்துகொள்ளும் ஒரு பெரும் பாடசாலை. பெற்றோர்கள் ஒவ்வொருவரும் கல்வி, தொழில், அனுபவம் மற்றும் பொருளாதார நிலை என வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டவர்கள் என்பதை உணர்வதே முதிர்ச்சியின் முதல் படி. காலநிலை, உணவு முறைகள், வட்டார மொழி, பண்பாடு மற்றும் உடை போன்றவைகள் இடத்திற்கு இடம் மாறுபடுவதற்கான வெளிப்படையான வேறுபாடுகள். இவைகள் மனிதர்களைப் பிரிப்பதற்கான காரணங்கள் அல்ல, மாறாக நம்மை வளப்படுத்துவதற்கான அம்சங்கள் என்பதைப் மாணவர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம். நோக்கத்தின் ஒருமைப்பாடு: பெற்றோரின் கனவும் மாணவனின் கடமையும் வசதி படைத்தவர்களும் வறுமையில் வாடுபவர்களும் ஒரே நோக்கத்திற்காகத்தான் தனது பிள்ளைகளை க்ல்லூரிக்கு அனுப்பி வருகிறார்கள். அதாவது, வறுமையில் உள்ளவர்கள் குடும்பத்தை உயர்த்தி தாங்கிப் பிடிக்கவும், வசதி படைத்தவர்கள், முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களையும் பெருமையையும் காத்து வளர்க்கத் தேவையான தகுதிகளைப் மீட்டெடுக்கவும் அனுப்பி வருகிறார்கள். எவரையும் ஏமாற்றவோ, இனம் பார்த்துப் பிரிக்கவோ, ஆசிரியரை அவமதிக்கவோ எந்தப் பெற்றோரும் அனுப்பவில்லை. மாறாக, தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற வேண்டும் என்ற தூய நோக்கமே அனைவரையும் ஒரு சேர இங்கே இணைத்துள்ளது என்பதனை பிள்ளைகள் உணர வழிவகை செய்தால் குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்றத்தினை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் கடமை: ஆளுமைச் சிற்பிகள் இந்த வாழ்வியல் உண்மைகளை கிடைக்கின்ற காலத்தில் யோசித்தும் சேகரித்தும் மாணவர்களிடம் சேர்ப்பது ஒவ்வொரு கல்லூரி ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது; மாணவர்களின் மனப்பக்குவத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகச் செயல்பட வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள், பண்புகள் போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறைகள், பகிர்ந்து கற்றலின் நன்மைகள் மற்றும் பெற்றோரின் கனவு ஆகியவற்றின் அவசியத்தை ஒவ்வொரு மாணவனின் மனதிலும் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு போதிப்பதன் மூலம், நற்சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக மாணவர்களை மாற்ற முடியும் என்பது அனைவரது கடமையாகும். மதிப்பிற்கான தேடல்: இரும்பும் தங்கமும் வழியில் ஒரு இரும்பு கம்பி கிடந்தால் அதைக் கடந்து செல்கிறோம்; அதுவே தங்கக் கம்பி என்றால், அடுத்தவர் பார்க்கிறார்களா என்று கவனித்து எடுத்துக்கொள்கிறோம். இரண்டுமே பூமியில் இருந்து எடுக்கப்பட்ட தாதுக்கள்தான், ஆனால் அவற்றின் 'மதிப்பு'தான் நம்மை ஈர்க்கிறது. இது மனிதனுக்கும் பொருந்தும். ஒரு மாணவன் பண்பு, ஒழுக்கம், நடத்தை மற்றும் மதிப்பிற்கான நற்குணங்களைப் பெற்றிருந்தால், தேடி வந்து உபசரிக்கும் காலம் அமையும். இரும்பாகக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவனை, தங்கமாக மாற்றி ஆளாக்கும் 'ஆளுமைச் சிற்பி'யாக கல்லூரிப் பருவம் திகழ வேண்டும். அப்போதுதான் தன் மீது உண்மையான நேசம், பாசம் கொண்டவர்களை அடையாளம் காண முடியும். முடிவுரை கல்லூரிப் பருவம் என்பது விளையாட்டு முறை, உணவுப் பகிர்வு, அறிவுப் பரிமாற்றம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் கூடாரம். இந்த அனுபவங்கள் மூலம் வளரும் மாணவர்கள், நற்பண்புகள் கொண்ட விட்டுக் கொடுத்து வாழும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தும் காலமே இது. தன் வேர்களை உணர்ந்து, பொறுப்புகளை ஏற்றுச் செயல்படும் ஒவ்வொரு மாணவனும், வெறும் பட்டதாரியாக மட்டும் அல்லாமல், உலகையே சீரமைக்கும் பெரும் சக்தியாக உருவெடுப்பான் என்பது திண்ணம். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



