காந்திநகர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) தொழில்கடன் வாங்கிய தொழிலதிபர் ஒருவர், கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய தொழிலதிபர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரஜாபதி. அவர், அங்கு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்காக, பிரஜாபதி கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் எஸ்பிஐ வங்கியை அணுகி, ரூ.80 லட்சம் ரொக்கக் கடன் வசதியையும், ரூ.2 கோடி காலக் கடனையும் கோரியுள்ளார். இதையடுத்து அடமானமாக வழங்கப்பட்ட சொத்துக்காக, அவர் கே.ஒய்.சி ஆவணங்கள், இருப்புநிலைக் குறிப்புகள், சொத்துப் பத்திரங்கள், இயந்திரங்களுக்கான விலைப்புள்ளிகள், விலைப்பட்டியல்கள் மற்றும் உரிமைப் பத்திரத் தெளிவு அறிக்கை ஆகியவற்றைச் சமர்ப்பித்தார். பின்னர் வங்கி நிர்வாகிகள் அந்த வளாகத்தைச் சரிபார்த்து, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், வங்கி கடந்த நவம்பரில் கடன்களை அனுமதித்தது. கடன் தவணைகளில் வழங்கப்பட்டு, அந்த தொகைகள் உரிமையாளரின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. வங்கிக்கு ஏமாற்றம் கடன் பெற்ற பிறகு, அவர் நீண்ட நாட்களாக மாதாந்திர தவணைகளைச் செலுத்தவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள் கடனை வசூலிப்பதற்காகவும், அடமானப் பொருட்களை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி நேரடியாகச் சென்றனர். ஆனால், அங்கு தொழிற்சாலை முழுவதும் பூட்டப்பட்டிருந்தது. மாயமான இயந்திரங்கள் இதையடுத்து அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வங்கிக் கடனுக்காக பிணையாக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் அனைத்தும் வங்கியின் அனுமதியின்றி அங்கிருந்து முழுமையாக கொள்ளை அடிக்கப்பட்டு, சட்டவிரோதமாக விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை தொழிலதிபரின் இந்த மோசடியால் வங்கிக்கு ரூ.2.81 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கியின் உதவி பொது மேலாளர் கடந்த (செவ்வாய்க்கிழமை) புகார் அளித்துள்ளார். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த நிலுவைத் தொகையானது, பொருந்தக்கூடிய வட்டியைத் தவிர, ரொக்கக் கடன் வசதியின் கீழ் ரூ.80.09 லட்சம், காலக் கடனின் கீழ் ரூ.1.72 கோடி மற்றும் FITL கீழ் ரூ.29.12 லட்சம் என ஆக மொத்தம் ரூ.2.81 கோடியை உள்ளடக்கியது. அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கி ஏலம் விட்டு ரூ.62.9 லட்சத்தை மீட்டெடுத்தது. புகாரின் அடிப்படையில், தொழிலதிபர், அவருக்குப் பிணை வழங்கியவர் (உத்தரவாதம் வழங்கியவர்) மற்றும் கூட்டாளிகள் மீது நம்பிக்கை துரோகம், கூட்டுச் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குஜராத் மாநில சிஐடி (குற்றம்) பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sbi-bank-fraud-of-rs-281-crore-businessman-flees-after-selling-bail-machines




