தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான். கண்டிப்பாக, தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழிலும் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு தனுஷின் அன்புப் பரிசு திரைப்படப் பணிகளுக்கு நடுவிலும், தான் கல்வி கற்ற பள்ளிக்காக நடிகர் தனுஷ் செய்துள்ள செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் செயல்பட்டு வரும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்த பழைய மேற்கூரை கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதன் இடத்தில் இந்த நவீன கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அந்த கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தான் படித்த பள்ளிக்கான நன்றிக்கடன் நடிகர் தனுஷ், தனது பத்தாம் வகுப்பு வரை இதே பள்ளியில்தான் கல்வி பயின்றார். தான் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்துள்ள அவரது செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “நான் நிறைய நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அதில் பல நிகழ்வுகள் எப்போதுதான் முடியும் என இருக்கும். முதல் முறை ஒரு நிகழ்வில் இது முடியவே வேண்டாம், கிளம்பவே வேண்டாம், இங்கேயே இருக்கலாம் எனத் தோன்றியது. அது இங்குதான். என்னுடைய ஆசிரியர்களைப் பார்க்கையில் பல நினைவுகள் வருகின்றன. வாணி மிஸ் மிகவும் கருணைமிக்க நபர். முன்பெல்லாம் நான் படிக்கும்போது ஆங்கிலம் எனக்கு வராது. ஆனால், தமிழ் நன்றாக வரும். இப்போது அப்படியே மாறிவிட்டது. நான் நிறையப் பேரைச் சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டுப் பேருக்கு தமிழ் எழுதவே வருவதில்லை. ஆனால், ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது. அது மிகவும் வருத்தமான விஷயம். நான் ஒரு பிரஞ்சு மொழித் தயாரிப்பில் ஒரு படம் நடித்தேன். பெல்ஜியமில் படப்பிடிப்பு நடந்தது. என்னிடம், ‘ஆங்கிலம் தெரியுமா’ எனக் கேட்டதும், ‘தெரியும்’ எனச் சொன்னேன். அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள் எனக் கேட்டதும், ‘உங்கள் தாய்மொழி தானே உங்களுக்கு தெரிய வேண்டும், ஆங்கிலம் உங்களுக்கு போனஸ்தானே’ என்றார்கள். உங்களுடைய தாய் மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அதனை எழுதப் படிக்க தெரிய வேண்டும். தமிழ் வரவில்லை எனச் சொல்வது பெருமையான விஷயம் கிடையாது. தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான். கண்டிப்பாக, தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் என் தமிழ் ஆசிரியை சித்ராவை நினைத்துக் கொள்கிறேன். அவர், எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை. தமிழிலும் கவனம் செலுத்துங்கள். இந்த வளாகம் இன்னும் பெரியதாக வேண்டும். இங்கு எத்தனை பேர் இருக்கிறீர்களோ, அத்தனை பேரின் பெயரிலும் கட்டடங்கள் வரவேண்டும். அந்த விழாவுக்கும் நான் வந்து பார்க்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றாக படியுங்கள்” என்றார். ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற தனுஷ் விழாவில், தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை சந்தித்த தனுஷ், ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் ஆசிரியர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். தான் கல்வி கற்ற பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்ததுடன், தன்னை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய தனுஷின் இந்த செயல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/admitting-that-one-does-not-know-tamil-is-not-a-matter-of-pride-it-is-a-disgrace-actor-dhanush




