சென்னை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரகாலத்தில் 14.08.2026 முதல் 20.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,577 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 5 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 53 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS), குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம்மற்றும்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force




