பெய்ஜிங், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் இன்று காலை பெய்ஜிங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங் ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார்.அதற்கு முன்பு 2016-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் இந்திய பயணத்தின்போதும் ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். இந்தியா–சீனா மோடி–ஜின்பிங் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், கசான் மற்றும் தியான்ஜின் நகரங்களில் நடைபெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக இரு தலைவர்களும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இரு தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இந்தியா–சீனா உறவுகளை நீண்டகால மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீனா தயாராக இருப்பதாக அவர் கூறினார். எல்லைப் பிரச்சினை 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா–சீனா உறவில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்தது. தற்போது இரு நாடுகளும் பதற்றத்தை தணித்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜின்பிங்கின் இந்திய பயணத்துக்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த மாதம் பெய்ஜிங்கில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆகஸ்டு 25-ந் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற 25-வது சுற்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் 8 அம்ச ஒருமித்த முடிவை எட்டின. எல்லை வரையறை மற்றும் எல்லை நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முன்னெடுக்கவும் ஒப்புக்கொண்டன.இதனால் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி நடைபெறும் மோடி–ஜின்பிங் சந்திப்பு, இந்தியா–சீனா உறவின் எதிர்கால போக்கு குறித்து முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.முதலில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்டிருந்த பிரிக்ஸ் அமைப்பில் 2024-ம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்தன. 2025-ம் ஆண்டு இந்தோனேசியாவும் இணைந்தது.பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளர் நாடுகளாக இணைந்தன. இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தொடக்க உறுப்பினர் நாடாகும். இதற்கு முன்பு 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 4-வது முறையாக பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாகவும் 2026 அமைந்துள்ளது. இந்த மாநாடு முடிந்ததும் பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/xi-jinping-leaves-for-new-delhi-for-brics-summit-to-hold-talks-with-modi-பிரிக்ஸ்-மாநாடு-இந்தியா-புறப்பட்டார்-சீன-அதிபர்-பிரதமர்-மோடியுடன்-இன்று-முக்கிய-பேச்சுவார்த்தை



