வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் "ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அதுக்கு ரொம்ப தண்ணி தாகமா இருந்துச்சாம்" "ஆமா. அப்புறம்" மகளை உறங்க வைக்க ஒரு வாரமாக நான் சொன்ன கதையை இன்று அவளே சொல்ல ஆரம்பித்தாள். "ஊரெல்லாம் பாத்துச்சாம் எங்கயும் தண்ணி இல்லையாம்." இனிய மழலை மொழியில் கூறிக்கொண்டிருந்தாள். "ஹ்ம்ம்" தட்டிக் கொடுத்துக் கொண்டே அவளிடம் கதை கேட்டேன். "பாப்பா வீட்டுக்கு வந்துச்சாம். ஒரு பாத்திரத்தில தண்ணீ கீழாவ இருந்துச்சாம்" "சரி." "சொம்பு எடுத்து. தண்ணி மொண்டு குடிச்சிட்டு ஜாலியா பறந்து போச்சாம்" அவள் சொன்ன கதையின் முடிவை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். "அடியே. ஒவ்வொரு கல்லா எடுத்து போட்டுச்சாம். தண்ணீ மேல வந்துச்சாம் காக்கா தண்ணிய குடிச்சிட்டு சந்தோசமா பறந்து போச்சாம். இப்படித்தான அம்மாவும் அப்பாவும் சொல்லுவோம்" அவள் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தாள். அவள் தெரிந்து தான் கதையை மாற்றிச் சொன்னாள். அவளைப் பொறுத்தவரை தினமும் நாங்கள் தண்ணீர் குடிக்கும்பொழுது என்ன பார்த்தாளோ அதை இயல்பாக சொல்லிவிட்டாள். அவள் சொன்னதை நினைத்து சிரிப்பு ஒருபக்கம் இன்னொரு பக்கம் வியப்பு அவள் தன் அறிவால் யதார்த்தத்தை உணர்ந்து கதை கூறி இருக்கிறாள் என்று. மூன்று வயது மகளாய் அவளை நான் சொல்வதை தான் திருப்பிச் சொல்லப்போகிறாள் என நினைத்துக்கொண்டு இருக்க அவளின் பேச்சு வியப்பை ஏற்படுத்தியது. ஆறு மாதங்களாகத் தான் அவள் பேசுகிறாள். இந்த நாட்களில் அவள் நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம். அவள் செய்யும் சேட்டைகளும் ஏராளம். கட்டிலில் ஏறி கீழே குதிப்பது நாற்காலியில் ஏறி டேபிள் மேல் ஏறி ஓரமாக நிற்பது வெளியில் ஓடிச் செல்வது பொருட்களை உடைப்பது கீழே தள்ளி விடுவது என அனைத்தும் செய்கிறாள். அது என்ன பழக்கமோ பல குழந்தைகளிடம் பார்த்ததுப் போல் இவளும் டிவி ரிமோட்டைப் பார்த்தால் தூக்கி கீழே போடுவாள். அன்றும் அப்படித்தான் தூக்கி எறிந்தாள். என் அத்தையும் மாமாவும் அவளை ஒன்றும் சொல்லவில்லை. எனக்குக் கோவம்.இப்படி செல்லம் கொடுத்தே அவள் செய்வது தப்பு என்று புரிந்து கொள்ளாமல் செய்கிறார்கள் என்று. ஓடிச் சென்று நான் வேகமாக அவள் கையில் ஒரு அடி வைத்தேன். அவளுக்கு நன்கு வலித்திருக்கும் அவள் முகம் மாறிப்போனது. பின் எப்படியோ அவளை சமாதானம் செய்து விட்டேன். அன்று இரவு தூங்கும் பொழுது அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது. கன்னத்தில் முத்தம் இட்டேன். "சாரி டா. அம்மா கோவத்துல அடிச்சிட்டேன் அம்மா லவ் யூ" என்றேன் தூங்கிக் கொண்டிருந்தவளின் காதருகே. உடனே அவள் கைகளை உயர்த்தினால் இதய வடிவில். எப்பொழுதும் நான் லவ் யூ எனக் கூறி இதய வடிவில் கைகளை வைப்பேன். அந்தத் தூக்கத்திலும் அவள் நான் கூறியதை உணர்ந்து கைகளை உயர்த்திய தருணம் என் கண்களை கலங்க செய்தது. சில நேரங்களில் நாம் காட்டுவது தான் உலகம். நான் சொன்ன வார்த்தைகள் மட்டும் தான் அவளுக்குத் தெரியும் என நினைப்பேன். ஆனால் அவளோ பலவற்றை புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டாள். "அம்மாவும் அப்பாவும் வெளிய போறோம். கொஞ்ச நேரம் ஆயா கூட விளையாடிட்டு இரு ஓகே யா ஆதினி" என்றேன். "அம்மா நானும் வரேன்" என்றாள். வழக்கம் போல் ஏன் ஊசிப் போடப்போகிறோம் என பொய் சொல்லவேண்டும் வேறு ஏதாவது சொல்லலாம் என யோசித்த நான் "அங்க பெரியவங்க மட்டும் தான் போகணும். சின்னப் பிள்ளைங்கள கூட்டிட்டுப் போகக் கூடாது. வேற ஒருத்தர பாக்கபோறோம் சரியா.நீ இங்கயே இரு வந்து உன்னை விளையாடக் கூட்டிட்டுப் போறேன்" என்றேன். "ஏன் மா. யாராவது செத்துப்போய்ட்டாங்களா" என்றாள். எனக்குப் பெரும் அதிர்ச்சி. அவள் மழலை மொழியில் என்ன வார்த்தைப் பேசுகிறாள் என்று கிரகிக்கவே எனக்கு சில நொடிகள் ஆனது. அதுவும் அவள் இப்படி கூறியதை என்னால் கடக்கவே முடியவில்லை. நான் திரும்பி என் வீட்டாரைப் பார்த்தேன். 'யாரு இப்போ இவளுக்கு இதெல்லாம் சொல்லித் தரா' என்கிற ஆதங்கப் பார்வையாக இருக்கலாம். ஆனால் இதற்கு ஏன் நான் ஆதங்கப் பட வேண்டும். அவள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தானே போகிறாள். ஆனால் ஏன் இவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொண்டால் என்கிற கேள்வி எனக்குள் தேங்கி நின்றது. அவளுக்குத் தெரிந்ததை அவளுக்குப் புரிந்ததைப் பேசுகிறாள் கேட்கிறாள். ஆனால் நாம் சொல்வதைத் தாண்டி அவள் கற்றுக்கொள்ளும் பொழுது தான் இன்னொன்றும் புரிகிறது நான் சொல்லித்தருவது மட்டும் அவள் கற்கப் போவது இல்லை. அவளும் உலகத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். "அம்மா பலூன் வாங்கித் தா" வண்டியில் செல்லும் பொழுது பலூனைப் பார்த்த மகிழ்ச்சியில் கேட்டாள். ஒரு மொபைல் கடையின் வாசலில் கட்டி வைத்திருந்த பலூனை வாங்கித் தரச் சொல்கிறாள். "அவங்க தர மாட்டாங்க ஆது. வீட்டுக்குப் போற வழில வேற கடைல வாங்கித் தரேன்" என்றேன். "அம்மா பலூன்னு அம்மா பலூன்னு. பலூன்னு வேணும்" "அது பலூன் கடை இல்லை. போன் கடை. பலூன் கட்டி வெச்சா அழகா இருக்குல்ல எல்லாரும் வேடிக்கைப் பாப்பாங்கன்னு வெச்சிருக்காங்க. நம்ம வேற கடைல பலூன் வாங்கிக்கலாம். அவங்ககிட்ட கேட்டா பலூன் தர மாட்டாங்கடா" "தருவாங்க மா. எனக்கு பலூன் வேணும்" என்னப் புரிய வைத்தாலும் அவர்கள் சொல்வதைத் தானே நாம் செய்ய வேண்டும். பக்கத்தில் ஒரு கடையில் பலூன் வாங்கி அதில் காற்று ஊதி அவளிடம் கொடுத்தேன். அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! இந்த சிறு பலூனில் இவ்வளவு சந்தோசம் இருக்கிறதா. நானும் சிறு வயதில் பண்டிகை நாட்களில் கோவில் வாசலில் இருக்கும் பலூன்களை அம்மாவிடம் வாங்கித் தரச் சொல்லி கேட்ட நாட்கள் நினைவிற்கு வந்தன. என்னை மீண்டும் சிறு பிள்ளையாக்கும் அவள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனேன். மற்றொரு நாள் தெருவில் அவளுக்குச் சாப்பிட ஊட்டிக் கொண்டே நடந்தேன். சாலையோரம் இருந்த திருமண விழாவில் இருந்து பாடல்களின் சத்தம் சாலை வரைக் கேட்டது. "அம்மா கல்யாணத்துக்குப் போலாம் மா" அந்த பாடல்கள்களையும் மின்விளக்குகளின் வெளிச்சத்தையும் கண்டு குஷியாகக் கூறினாள். "அது யார்னு நமக்கு தெரியாது மயிலா. அங்க வேண்டாம். இன்னொரு நாள் உன்னை வேற கல்யாணத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்" "போலாம் மா" என்றாள் அடம் பிடிக்கும் தொனியில். "அம்மா பாரு ரெடியா இல்லை. இப்படியே போன உள்ள விட மாட்டாங்க" "அதெல்லாம் விடுவாங்க. போய் பாக்கலாமா" என்றாள். இப்பொழுது என் ஆசையையும் அவள் தூண்டி விட்டாள். என் சின்ன வயதில் இருந்தே முன் பின் அறியாத யாரென்று தெரியாத அழைப்புகள் இல்லாத திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. திருமணத்திற்குச் செல்ல வேண்டும் சாப்பிட வேண்டும் சுற்றி நடப்பதை வேடிக்கைப் பார்க்க வேண்டும் யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும். 'சுடிதாரும் ஓரளவுக்கு நன்றாகத் தான் போட்டிருக்கிறோம். பேசாம போய்டலாமா. கையில தட்டு அதுல பாப்பாக்கு இட்லி. யாராவது கேட்டா அவளைச் சாப்பிட வைக்க வந்தேன்னு சொல்லிடலாம்.' என யோசித்த மனம் சட்டென்று மண்டபத்திற்குள் நுழைந்தது. 'அட இட்டு கோலம் போட்டு அடி கெட்டி மேளம் பாட்டு அவ போல இங்க யாருன்னு காட்டு' நாங்கள் உள்ளே நுழையும் பொழுதே பாடல் ஒலிக்க இருவரும் குதூகலம் ஆனோம். நக்கில் வச்சினு தவில அடிக்க பவளமல்லிய கட்டிக்க வா பவளமல்லிய கட்டிக்க வா. குட்டீஸ்களுடன் சேர்ந்து இளம் வயதினரும் மண்டபத்திற்குள் நடனமாடிக் கொண்டிருந்தனர். என் மகளும் குதித்தாள். அவளைக் கீழே இறக்கிவிட்டு ஆடச் சொன்னேன். அவள் சற்றுத் தயங்கினாள். ஆனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இட்லியை விழுங்கினாள். இன்னும் அரை இட்லி தட்டில் இருந்தது சாம்பார் தீர்ந்துப் போனது. சரி கல்யாண சாம்பாரில் ஊட்டுவோம் என எண்ணி உணவுக் கூடத்திற்குச் சென்றேன். "அண்ணா சாம்பார்" கையில் வாளியுடன் இருந்தவரிடம் தட்டை நீட்டினேன். "கண்ணு தோசை பாரு சூடா இருக்கு. வாங்கிக்கோ பிள்ளைக்கு ஊட்டு" என்றார் என் பின்னால் நின்றிருந்தவர். பெண் வீட்டாரா மாப்பிள்ளை வீட்டாரா தெரியவில்லை. கையில் இருந்த என் மகளைப் பார்த்தவர் அன்புடன் உபசரித்தார். தட்டில் சூடான ஆனியன் கேரட் தோசையை வைக்கச் சொன்னவர் தன் கையில் இருந்த நூடுல்ஸையும் ஒரு கரண்டி வைத்தார். நிறைந்த தட்டுடன் மீண்டும் ஹாலிற்குச் சென்றோம். 'ஐயா கருப்பனே வாருமையா. எங்க கூடவே வாருமையா' கூட்டம் குறையக் குறைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இருக்கிறோம் என உறுதி செய்தப் பின் நடுத்தர வயதுடைய பலரும் நடனமாடத் தொடங்கினர். மீதம் இருந்த இட்லியை நான் சாப்பிட்டுவிட்டு அவளுக்குத் தோசையை ஊட்டினேன். அதையும் இரண்டு வாய்க்கு மேல் அவள் வாங்கவில்லை. அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சுற்றியும் வேடிக்கைப் பார்த்தேன். புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உறவினர்களிடம் சென்று பேச வேண்டியதில்லை. எந்த யோசனைகளும் அற்று என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை மட்டும் பார்க்கலாம். இசையில் தரையில் இருந்த கால்கள் அதிர்ந்தன. ஏதோ ஒரு மகிழ்ச்சி உணர்வு உள்ளுக்குள் ஊறியது. மெல்ல தோசையை எடுத்து சாம்பாரில் நனைத்தேன். தோசையும் கல்யாண சாம்பாரும் வழக்கம் போல் ருசியாக இருந்தது. முழுவதுமாக சாப்பிட்டேன். நூடுல்ஸின் சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டது. என் மகளைப் பார்த்தேன். அவள் கொண்டாட்ட களிப்பிலேயே இருந்தாள். சில நிமிடங்கள் அப்படியே இருந்தோம். கையில் அலைபேசிக் கூட இல்லாமல் வந்துவிட்டோம் என்பது நினைவிற்கு வந்தது. வீட்டார்கள் இந்நேரம் எங்களைத் தேட ஆரம்பித்திருப்பார்கள். கிளம்ப வேண்டி எழுந்தேன். மகளையும் இனிய நினைவுகளையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/literature/how-a-toddler-taught-her-mother-to-experience-life-differently




