Vollständiger Artikel
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ``மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைக் கையாண்டு வரும் தனியார் நிறுவனம், குப்பைகளுக்கு பதில் மணலைக் கொண்டு சென்று கொட்டி வந்துள்ளார்கள். இது குறித்து ஏற்கெனவே புகார் வந்த நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்ய, மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு 1,000 டன் குப்பைகளுக்கு பதிலாக மணலை கொண்டு சென்றபோது லாரிகள் பிடிபட்டுள்ளது. குப்பைகளுக்கு பதில் மணலை அள்ளி கணக்கு காட்டுவதற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி இது போன்ற நிறுவனங்களைத்தான் திமுக ஆட்சியில் போற்றி பாதுகாத்து வந்துள்ளார்கள். நேற்று (27-06-2026) இரவுகூட இரண்டு லாரிகள் அது போல பிடிபட்டிருக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் வருகைக்காகவும் யாருக்காகவும் நாங்கள் எந்த நிகழ்ச்சியையும் நிறுத்தச் சொல்லவில்லை. எல்லா இடத்திலும் நிகழ்ச்சி நடத்தச் சொல்லி இருக்கிறோம். 10 பேர் 15 பேர் தொலைபேசியில் வீடியோ எடுப்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. அரசு மருத்துவமனையில் நிறைய பிரச்னைகள் உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளது. விரிவாக்கப் பணிக்கு இடம் கேட்டு 10 வருடமாக காத்துக் கொண்டுள்ளனர். அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா இடத்திலும் கட்டடம் உள்ளது. ஆனால் ஊழியர்கள் இல்லை. கட்டடங்களாக இருக்கிறது... ஆனால் பணி செய்ய ஆளில்லை. இதையெல்லாம் சரி செய்ய உள்ளோம். குதிரை பேரம், ஒட்டக பேரம் தி.மு.க -வும் அ.தி.மு.க -வும் சேர்ந்து அவர்களுக்குள் செய்துள்ளார்கள். இரண்டு பேரும் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி செய்ததன் விளைவாகத்தான் ஒவ்வொருவரும் விலகிச் செல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து திமுகவில் இனிமேல் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா? என்று தெரியவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி கட்சிகளை நிர்பந்தித்து ஆட்சி அமைக்க திட்டமிடுகிறார்கள். தி.மு.க -வில் இனி அரசியல் எதிர்காலம் இருக்காது அதை விட்டு ஒதுங்கிவிடலாம் என சிலர் நினைப்பதாக தகவல் வருகிறது. குதிரை, ஒட்டக பேரம் எடப்பாடியும் ஸ்டாலினும் சேர்ந்து என்னென்ன செய்தார்கள் என்று ஆர்.பி.உதயகுமாரைக் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலே கடினமாகிவிடும். திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி, திமுக அதிமுக என எல்லோரும் ஒன்றிணைய தயாராகி விட்டார்கள். இரண்டு பேரும் கடைசியில் தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதிமுகவும் திமுகவும் ஒன்றிணை தயாராகி விட்டார்கள். விரைவிலேயே பாஜகவோடு இணைந்து அதிமுகவும் திமுகவும் அமைச்சர் பதவிகூட வாங்க தயாராக உள்ளார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் தனியாக நின்று வெற்றி பெற்றோம். மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்... மக்கள் நம்பிக்கை யார் மீது வைத்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரியும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




