கோவை, கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென முடிய பேருந்தின் கதவு உக்கடத்தில் இருந்து சோமனூர் நோக்கிச் சென்ற 30எச் வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கோவை - திருச்சி சாலையில் உள்ள இருகூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக வயதான பெண்கள் மற்றும் பெண் பயணிகள் பேருந்திற்குள் ஏறிக்கொண்டிருந்தனர். பயணிகள் முழுமையாக ஏறி முடிப்பதற்குள், ஓட்டுநர் பேருந்தின் பின்புறம் என்ன நடக்கிறது என்று கவனிக்காமல், அவசரமாக ஆட்டோமேட்டிக் கதவை மூடியுள்ளார். அதே நேரத்தில் பேருந்தையும் இயக்கத் தொடங்கியுள்ளார். முகத்தில் பலத்த காயம் கதவு மூடிய தருணத்தில் படியில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுகளுக்கு இடையே மாட்டி நசுங்கியது. இதில் அவரது வாய் மற்றும் மூக்குப் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதுடன், பலத்த காயமும் ஏற்பட்டது. பேருந்து நகரத் தொடங்கியதால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அவரைப் பார்த்து சக பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து பயணிகள் உடனடியாக சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் செய்தனர். ஓட்டுநர், நடத்துநருடன் பயணிகள் வாக்குவாதம் பேருந்து நிறுத்தப்பட்டதும், நடத்துநர் மற்றும் ஓட்டுநரின் இந்த அசாத்திய அலட்சிய போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட்டனர். ”பின்னாடி பயணிகள் ஏறுவதைக்கூடப் பார்க்காமல் வண்டியை இப்படி ஓட்டுகிறீர்களே, மூக்கில் ரத்தம் கொட்டுகிறது பாருங்கள்" என்று ஓட்டுநரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பான சூழலும் நிலவியது. தற்போது இந்த விபத்து மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயணியர்களிடையே அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-nose-and-mouth-broken-after-getting-caught-in-government-bus-door-passenger-argues-with-driver



