‘வந்தே மாதரம்’ பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது தேச விரோதமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியிருந்த நிலையில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் முடிவு செய்த ‘வந்தே மாதரம்’ பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருவதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:“வரலாற்றை படித்தால் உண்மை தெரியும். பண்டித நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் ஆகியோர் ஒன்றாக இணைந்து, ‘வந்தே மாதரம்’ பாடலில் உள்ள 6 சரணங்களை 2 சரணங்களாக குறைக்க முடிவு செய்தனர். நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. 1937-ம் ஆண்டில், நாட்டுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காத நிலையில், தேசிய தலைவர்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்தனர். கடந்த 90 ஆண்டுகளாக நாங்கள் அதையே பின்பற்றி வருகிறோம். 90 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில், இப்போது மட்டும் இந்த விவகாரம் ஏன் எழுப்பப்படுகிறது? குஜராத் முதல்-அமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி ஏன் ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து எதுவும் செய்யவில்லை? கடந்த 11 அல்லது 12 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் முதல்-அமைச்சர்கள் உள்ளனர். அங்கும் ஏன் இதை நடைமுறைப்படுத்தவில்லை? எப்போது வேண்டுமோ அப்போது புதிய பிரச்சினைகளை எழுப்புகிறார்கள்.காங்கிரஸ் ஒருபோதும் ‘வந்தே மாதரம்’ பாடுவதற்கு எதிரானது அல்ல. காங்கிரஸ் கட்சியும், சேவாதளமும் பல ஆண்டுகளாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி வருகின்றன. தேசிய கீதத்தை பாடுவதைப் போலவே இதையும் பாடுகிறோம். ‘ஜன கண மன’ பாடலும் முதலில் 5 சரணங்களைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சரணம் மட்டுமே பாடப்படுகிறது. அதனை ரவீந்திரநாத் தாகூர் அங்கீகரித்தார். ‘வந்தே மாதரம்’ 2 சரணங்களையும், ‘ஜன கண மன’ ஒரு சரணத்தையும் பாடுவதற்கு ஏறக்குறைய ஒரே நேரம்தான் ஆகும். தேசிய தலைவர்கள் முடிவு செய்தபடியே நாங்கள் பாடுகிறோம். அவர்கள் கூறியபடி பாடினால் நாங்கள் தேச விரோதிகளா? அப்படியானால் ரவீந்திரநாத் தாகூர், நேரு, படேல், போஸ் ஆகியோரும் தேச விரோதிகளா?இத்தனை ஆண்டுகளாக நீங்களும் முழுமையாக ‘வந்தே மாதரம்’ பாடவில்லை. அப்படியானால் நீங்களும் தேச விரோதிகளா? நாட்டில் பிரிவினை அரசியலை நடத்துகிறார்கள். இது நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல. நாம் இருக்கிறோமோ இல்லையோ, நாடு நிரந்தரமானது. நாட்டையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பது நமது பொறுப்பு” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்த கார்கே, “அவருக்கு திடீரென தேசப்பற்று வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளாக உள்துறை அமைச்சராக இருந்தும், ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடாதவர்களை தேச விரோதிகள் என்றும், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாகவும் கூறுவது மலிவான அரசியல் என்று அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நேரு உள்ளிட்ட தலைவர்களை விமர்சிப்பவர்களையும் கார்கே கடுமையாக சாடினார்.“நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள், எங்களுக்கு பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள். கல்வியை மேம்படுத்துங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள், பணவீக்கத்தை கட்டுப்படுத்துங்கள், முதலீடுகளை அதிகரியுங்கள். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற விவகாரங்களை எழுப்ப வேண்டாம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/cong-following-vande-mataram-version-decided-by-mahatma-gandhi-patel-says-kharge



