கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பாரதியார் நகர் அருகே திருமலை நகர் பகுதியில் வசித்து வந்தவர் உலகநாதன் (50 வயது). இவருடைய மனைவி ராணி (44 வயது). இவர்களுக்கு கவிதா (28 வயது) என்ற மகளும், சுரேஷ் (27 வயது) மற்றும் தினேஷ் (26 வயது) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் கவிதாவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். சுரேசுக்கும் திருமணம் முடிந்து பெங்களூருவில் வசித்து வருகிறார். தினேஷ் ஓசூர் பகுதியில் சிறிய அளவிலான தொழிற்சாலையை நடத்தி வருகிறார். தூக்குப்போட்டு தற்கொலை இந்த நிலையில் நேற்று காலையில் உலகநாதன், மகள் கவிதாவை வீட்டிற்கு வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து கவிதா பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது அங்கு கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள ஒரு அறையில் உலகநாதனும், ராணியும் 2 மின்விசிறிகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து அருகருகே பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். போலீசார் விசாரணை மேலும் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், உலகநாதன் மீது ஓசூர் அட்கோ, மத்திகிரி மற்றும் சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில், புதிதாக கட்டப்படும் வீடுகளில் தாமிர மின் கம்பிகளை திருடுவது சம்பந்தமாக 6 திருட்டு வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்கில் அவரை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. திருட்டு வழக்கில் விசாரணை பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் விசாரணைக்காக நேற்று முன்தினம் அவரை அட்கோ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உலகநாதனும், அவருடைய மனைவி ராணியும் வீட்டில் தற்கொலை செய்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தொடர்பாக, கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதனால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்தா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-husband-wife-die-by-suicide-police-probe




