திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் அருளினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 5-வது நாளில் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் 6-ம் நாளான நேற்று அனுமந்த வாகன சேவை, தங்க தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவை நடைபெற்றது. சூரிய பிரபை வாகனம் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை 8 மணிக்கு, மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் அருளினார். சூரிய ஒளிக்கதிர்களுக்கு மத்தியில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி திருமாட வீதிகளில் வலம் வந்தபோது, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “கோவிந்தா. கோவிந்தா.” என முழக்கம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர். கற்பூர ஆரத்தி காண்பித்தும் சுவாமியை தரிசித்தனர். வாகனத்தின் முன்பாக பக்தர்கள் குழுவினர் மரபுவழி பஜனை, கோலாட்டம் ஆடி சுவாமியைப் போற்றினர். ஆயுள், ஆரோக்கியத்தை அருளும் சூரிய பிரபை வாகனம் சூரியன் அனைத்து உயிரினங்களுக்கும் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் வழங்கும் தெய்வீக சக்தியின் அடையாளமாக விளங்குகிறார். இயற்கைக்கு உயிர்ச்சக்தி அளிப்பவராகவும், நோய்களை நீக்குபவராகவும் சூரியனை பக்தர்கள் சூரியநாராயணராக வழிபடுகின்றனர். சூரிய மண்டலத்தின் மத்தியில் ஸ்ரீமந்நாராயணர் வீற்றிருக்கிறார் என்ற ஆன்மிக நம்பிக்கையின் அடையாளமாக சூரிய பிரபை வாகனசேவை விளங்குகிறது. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்பசுவாமியை தரிசிப்பதன் மூலம் ஆயுள், ஆரோக்கியம், சுகம், சந்தோஷம், செல்வ வளம் மற்றும் நல்ல சந்தானப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். சந்திர பிரபை வாகனம் இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ மலையப்பசுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அருள உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இன்றைய வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் செயல் அலுவலர் முத்தாட ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌத்ரி, தலைமை விஜிலன்ஸ் அதிகாரி கே.வி. முரளிகிருஷ்ணா, பல்வேறு வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/tirumala-brahmotsavam-day-7-malayappa-swamy-blessed-devotees-on-surya-prabha-vahanam




