1. மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன் தன் மகளின் கல்லூரிப் படிப்புச் செலவுக்கு கல்விக் கடனுக்காக முயற்சி செய்தார். சில காரணங்களால் கல்விக் கடன் கிடைக்கவில்லை. எனவே, அவசரமாகப் பணம் செலுத்தவேண்டிய சூழலில் தனியார் வங்கியொன்றில் 16% வட்டியில் பர்சனல் லோன் வாங்கினார். “வீட்டில் நகை சும்மதானே இருக்கு. இப்ப அடமானம் வச்சுட்டு, சீக்கிரம் திருப்பிடலாமே. வட்டி கம்மியா இருக்குமே.” என்று அவருடைய அப்பா ஆலோசனை சொன்னார். “நகையெல்லாம் அடமானம் வைக்கப்படாது. எல்லாமே என் அம்மா கொடுத்தது. ஏதாவது சிக்கல் ஆகி மீட்க முடியாமப் போச்சுன்னா.” என்று சொல்லி ராஜசேகரனின் மனைவி மறுத்துவிட்டார். வேறு வழி இல்லாமல் அவர் பர்சனல் லோன் வாங்கி மகளின் படிப்புச் செலவைச் சமாளித்தார். 2.சென்னையைச் சேர்ந்த ராமநாதன் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி இ.எம்.ஐ செலுத்திக் கொண்டிருக்கிறார். வீடு கட்டி 10 வருடங்கள் ஆகிவிட்டதால், வீட்டைப் புதுப்பிக்க விரும்பினார். அவருக்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. “வீட்டுக் கடன் டாப்அப் கடன் வாங்கினால் மிகக் குறைந்த வட்டியிலேயே கிடைத்துவிடும் நண்பா.” என அவருடைய அலுவலக நண்பர் சொன்னார். ஆனால், வீட்டுக் கடனை சீக்கிரமாக முடித்து பத்திரத்தை வங்கியிலிருந்து வாங்கிவிட்டால்தான் வீடு நம்முடையது ஆகும், நிம்மதியாக இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் ராமநாதன். எனவே, மேற்கொண்டு வீட்டுக் கடன் டாப்அப் வாங்க விரும்பாமல் பர்சனல் லோன் வாங்கி வீட்டைப் புதுப்பித்தார். 3. புதுச்சேரியைச் சேர்ந்த சந்திரமூர்த்தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் இல்லாததால், அவசர மருத்துவச் செலவுக்கு உறவினரிடம் கடன் வாங்கினார். பிறகு அந்தக் கடனை அடைக்க பர்சனல் லோன் வாங்கினார். ஆனால், அவரிடம் 20 பவுன் தங்க நகை பீரோவில் இருந்தது. மாடல் படம் இவர்களைப் போலத்தான் பெரும்பாலானோர் கடன் விஷயத்தில் ஏதோ ஒரு முடிவை எடுக்கிறார்கள். அது லாபகரமானதா, குறைந்த வட்டியிலான கடனா என யோசிப்பதில்லை. வாழ்க்கையில் எல்லோருக்குமே எதிர்பாராத நேரத்தில் பணத்தேவை வருவது தவிர்க்க முடியாத ஒன்று. மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்விக் கட்டணம், திருமணம், வீட்டுப் பழுது பார்ப்புச் செலவுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கான செலவு, தொழிலுக்கான முதலீடு எனப் பல்வேறு காரணங்களுக்காக உடனடியாகப் பணம் தேவைப்படலாம். அப்போது நம்மில் பலரும் லோன் வாங்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், எந்த லோன் வாங்குவது என்பதில் தெளிவு இருப்பதில்லை. நகை ஏதும் இல்லை, வீட்டுக் கடன் இல்லை என்பவர்களுக்கு பர்சனல் லோன் சரியாக இருக்கலாம். நகை பீரோவில் தூங்கும்போதும் சென்டிமென்ட் பார்த்துக்கொண்டு நகைக் கடன் வாங்காமல் பர்சனல் லோனைத் தேர்வு செய்வது அதிக வட்டிச் செலவு என்பதைப் பலரும் உணர்வதில்லை. ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியிருப்பவருக்கு டாப்அப் லோன் சிறந்த வாய்ப்பு. ஆனால், நிறைய பேர் அதுபற்றி யோசிப்பதில்லை. யாருக்கு எந்தக் கடன் சரியாக இருக்கும் என்பதை அந்தந்தக் கடன்களின் பாசிட்டி நெகட்டிவ் விஷயங்களை வைத்து முடிவு செய்வதே சரியாக இருக்கும். நிதி ஆலோசகர்கள் பலரும் சொல்லும் ஆலோசனையின் அடிப்படையில் அதுபற்றி விரிவாகப் பார்ப்போம். மாடல் படம் பர்சனல் லோன்! பர்சனல் லோன் என்பது பொதுவாக எந்த ஒரு குறிப்பிட்ட சொத்தையும் அடமானம் வைக்காமல், ஒருவருடைய வருமானம், வேலை நிலைத்தன்மை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன். மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீட்டுச் செலவு போன்ற பல்வேறு தேவைகளுக்கு அதிகம் பேர் இந்தக் கடனை வாங்குகிறார்கள். பாசிட்டிவ்: வீடு, நகை போன்ற எந்தச் சொத்தையும் அடமானம் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. தகுதி உள்ளவர்களுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் செயல்முறையைப் பொறுத்து விரைவாக கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. நெகட்டிவ்: அடமானம் இல்லாத கடன் என்பதால், மற்ற கடன்களைவிட வட்டி அதிகமாக இருக்கக்கூடும். புராசஸிங் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் இருக்கலாம். அடமானம் எதுவும் தேவையில்லை, உடனே பணம் கிடைக்கிறது என்பதால் தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்கும் மனநிலையில் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. யாருக்குப் பொருத்தமானது? அவசரமாகப் பணம் வேண்டும், அடமானம் வைக்க தங்கம், சொத்து ஏதும் இல்லை, குறுகிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் பர்சனல் லோன் வாங்க பரிசீலிக்கலாம். நகைக் கடன்! வீட்டில் பயன்படுத்தாமல் தங்க நகைகள் இருக்கும்பட்சத்தில், அவற்றை அடமானமாக வைத்து பணம் பெறுவது நகைக் கடன். அவசரப் பணத்தேவைக்கு அதிக பேர் இந்தக் கடனை வாங்குகிறார்கள். பாசிட்டிவ்: பிற கடன்களை விட பணம் விரைவாகக் கிடைக்கும். நகையை மதிப்பீடு செய்து கடன் வழங்கும் நடைமுறை பொதுவாக எளிமையாக இருக்கும். பர்சனல் லோனைவிட குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். சில மாதங்களில் பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட முடியும் என்றால் நகைக் கடன் சிறந்த தேர்வு எனலாம். நெகட்டிவ்: கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், விதிமுறைகளுக்கு உட்பட்டு அடமான நகையை ஏலத்தில் விற்கும் நிலை ஏற்படலாம். நகையின் சந்தை மதிப்பு எவ்வளவு இருந்தாலும், அதன் முழுத் தொகையையும் கடனாக வழங்கமாட்டார்கள். விதிமுறைகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனம், வங்கியைப் பொறுத்து தொகை மாறுபடலாம். குடும்பத்தினர் மனம் விரும்பும் நகையை அடமானம் வைத்துவிட்டு, மீட்க முடியாத நிலை ஏற்பட்டால் குடும்பத்தில் பிரச்னை, மன அழுத்தம் ஏற்படும். யாருக்குப் பொருத்தமானது? குறுகிய கால அவசரத் தேவை, வீட்டில் பயன்படுத்தப்படாத தங்க நகை இருக்கும் நிலை, விரைவில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தால் நகைக் கடன் நல்ல தேர்வு. வீட்டுக் கடன் டாப்அப்! ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி, அதை முறையாகச் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, வீட்டுக் கடன் டாப்அப் கடன் பெறும் வாய்ப்பு இருக்கலாம். ஏற்கெனவே வீட்டுக் கடன் உள்ளவர்கள் மட்டுமே இந்தக் கடனை வாங்க முடியும். வீட்டுக்கடன் பாசிட்டிவ்: வட்டி பொதுவாக பர்சனல் லோனைவிட குறைவு. சில லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில் இந்தக் கடன் ஏற்றதாக இருக்கும். வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப நீண்டகாலத்தில் திருப்பிச் செலுத்தும் வசதி கிடைக்கலாம். வீட்டுக் கடன் செலுத்தி வரும் வாடிக்கையாளரின் வருமானம் உள்ளிட்ட விவரங்கள் வங்கியிடம் ஏற்கெனவே இருப்பதால் கடன் வாங்கும் செயல்முறை எளிதாக இருக்கக்கூடும். நெகட்டிவ்: மேலும் கடன் சுமை அதிகரிக்கும். கடனை நீண்டகாலம் கட்ட வேண்டிய நிலை வரலாம். இ.எம்.ஐ சுமை கூடுதல் அழுத்தம் தரலாம். பர்சனல் லோன் அல்லது நகைக் கடனைப் போல உடனடியாகப் பணம் கிடைக்காமல், வங்கி மதிப்பீடு செய்வது மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் நடைமுறைகள் காரணமாக சில நேரங்களில் சற்று தாமதம் ஆகலாம். யாருக்குப் பொருத்தமானது? ஏற்கெனவே வீட்டுக் கடன் உள்ளது என்கிறவர்கள், நீண்டகாலம் இ.எம்.ஐ செலுத்தும் வாய்ப்பு, வருமானம் உள்ளது என்ற நிலையில் டாப்அப் கடனைப் பரிசீலிக்கலாம். கடன் வாங்கும் முன் முடிந்த அளவுக்கு குறைந்த வட்டியில் வாங்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வாங்குவதே நல்லது. சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காக சுமையான கடன்களில் சிக்கிக்கொள்ளக்கூடாது! Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/money/guidance-for-personal-loan-gold-loan-home-loan-top-up



