கொச்சி, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சுமார் 50 நிமிடங்கள் ஆன நிலையில், 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். விமானத்தின் முதலாவது என்ஜினில் ஆயில் அளவும், அழுத்தமும் வேகமாகக் குறைந்து ஆபத்தான நிலையை எட்டியது. இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள், அபுதாபி செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் கொச்சிக்கே திரும்ப முடிவு செய்தனர். கட்டுப்பாட்டு அறை மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோளாறு ஏற்பட்ட என்ஜினின் செயல்பாடு நடுவானிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விமானத்தை அவசரமாக தரையிறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டன. ஒரே ஒரு என்ஜினின் உதவியுடன் இயக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம், கொச்சி விமான நிலையத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக தரையிறங்கியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் அனைத்து பயணிகளுக்கும் மாற்று பயண ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/air-india-express-abu-dhabi-bound-flight-forced-to-return-to-kochi-after-engine-oil-warning-danger




