சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை. தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும், ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவரது கணவர் டி.பிரகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட கலெக்டரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிற்க வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது. தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ என்ற ஐயத்தைத்தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-great-tragedy-that-untouchability-persists-even-80-years-after-gaining-independence-anbumani-ramadoss




