புதுடெல்லி 5 மாநில தேர்தல்களில் காங்கிரசை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிக செலவு செய்துள்ள விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில், தமிழகத்தில் த.வெ.க.வும், கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்துள்ளன. அசாமில் ஆட்சியை தக்க வைத்த பா.ஜ.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி அதிகாரத்திற்கு வந்தது. புதுச்சேரியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தல் நிதி இந்த சூழலில், சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஒப்பீட்டளவில் எந்த அளவுக்கு செலவு செய்துள்ளது என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில், பா.ஜ.க. ரூ.1,473 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.207 கோடியும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளன. எனினும், பா.ஜ.க.வின் மத்திய தலைமையகத்திற்கு மட்டுமே ரூ.1,473 கோடியளவுக்கு நிதி கிடைத்துள்ளது என்றும் ஆனால், காங்கிரசுக்கு மத்திய மற்றும் மாநில பிரிவுகளிடம் இருந்து ஒட்டுமொத்தத்தில் ரூ.207 கோடி கிடைத்துள்ளது என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. 7 மடங்கு அதிகம் இதன்படி, காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிக நிதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தேர்தல் செலவினம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. அவை வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த நிதி இன்னும் அதிகரித்து காணப்படும். இதுதவிர, தேர்தலுக்கு முன்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி பா.ஜ.க.விடம் ரூ.6,722.6 கோடி நிதி இருந்தது. ஆனால், மே 6-ந்தேதி அக்கட்சியிடம் ரூ.7,627.6 கோடி என்ற அளவில் நிதி அதிகரித்து உள்ளது. இதனால், தேர்தல் காலத்தில் பா.ஜ.க.வுக்கு ரூ.904.6 கோடி அதிகரித்திருக்கிறது. காங்கிரசுக்கு சரிவு இது ஒருபுறம் இருக்க, தேர்தல் காலத்தில் காங்கிரசுக்கு நிதி நிலைமை சரிவடைந்து உள்ளது. இதில், காங்கிரசின் மத்திய தலைமையகம் மற்றும் 5 மாநில பிரிவுகள் என ஒட்டுமொத்தத்தில் ரூ.169.06 கோடி (பணம் ரூ.22.9 கோடி மற்றும் வங்கி கணக்குகளில் ரூ.146.1 கோடி) என்ற அளவில் இருந்த நிதியானது, தேர்தல் முடிவில் ரூ.103.2 கோடியாக இருந்தது. இது ரூ.65.86 கோடி சரிவு ஆகும். அசாமில் பா.ஜ.க. அதிகம் பா.ஜ.க.வின் செலவின அறிக்கையின்படி, தமிழகம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சி மொத்தம் ரூ.159.7 கோடி செலவு செய்துள்ளது. இவற்றில் ரூ.130.4 கோடி நிதியானது கட்சி பிரசாரத்திற்கு மட்டும் செலவாகி உள்ளது. மீதமுள்ள செலவினங்கள் வேட்பாளர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவையாகும். எனினும், அசாம் மாநிலத்திற்கு மட்டும் அதிக அளவாக அக்கட்சி ரூ.96.27 கோடி செலவு செய்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.51.56 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.11.90 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் அதிகம் காங்கிரஸ் கட்சியானது, ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து, கட்சி பிரசாரம் என்ற வகையில் ரூ.143 கோடியும், வேட்பாளர்கள் செலவினம் என்ற வகையில் ரூ.105.55 கோடியும் செலவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த அளவில், ரூ.248.55 கோடி செலவின தொகையாக உள்ளது. இதில், இடதுசாரியை வீழ்த்தி ஆட்சியை பிடித்த கேரளத்தில் அதிக அளவாக ரூ.59.28 கோடியை அக்கட்சி செலவிட்டு உள்ளது. இதற்கு அடுத்து அசாமில் ரூ.22.62 கோடி செலவு செய்துள்ளது. கேரளத்தில் அக்கட்சி செலவு செய்த தொகை வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அக்கட்சி ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோன்று, அசாமில் பா.ஜ.க. செலவு செய்ததற்கு ஏற்ப வெற்றியை தக்க வைத்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/5-state-elections-bjp-spent-7-times-more-than-congress




