இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் எதிர்காலம். ஆனால் அவர்களின் ஆரோக்கியம் இன்று மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.), குழந்தைப்பருவ உடல் பருமனை 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் உடல் பருமன் நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், இன்று அது பல்வேறு நாள்பட்ட நோய்களின் முன்னறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. உடல் பருமன் என்றால் என்ன? ஒரு குழந்தையின் வயது, உயரம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ற இயல்பான எடையை விட அதிகமாக இருந்தால் அது உடல் பருமன் எனப்படுகிறது. இதை உடல்நிறை குறியீடு (பி.எம்.ஐ.) மூலம் கணக்கிடுகின்றனர். பி.எம்.ஐ. 95 சதவீதத்திற்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும். 85 முதல் 95 சதவீதத்திற்குள் இருந்தால் அதிக எடை எனவும் வகைப்படுத்தப்படுகிறது. துரித உணவுகளின் தாக்கம் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், சாக்லெட்டுகள் போன்ற உணவுகளில் அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. ஆனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் உடலில் கொழுப்பு சேமிக்கப்பட்டு உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது. முன்பு மைதானங்களில் விளையாடிய குழந்தைகள் இன்று செல்போன், கணினி, தொலைக்காட்சி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து விடுகின்றனர். உடல் இயக்கம் குறைவதால் உட்கொள்ளப்படும் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக சேமிக்கப்படுகின்றன. அதோடு, இரவு அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் தூக்கம் குறைகிறது. இதனால் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதிகமாகச் சாப்பிடும் பழக்கமும் உருவாகிறது. பெற்றோருக்கு உடல் பருமன் இருந்தால் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பு அதிகரிக்கும். இருப்பினும் மரபணுக்களை விட குடும்பத்தின் உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகும். சில நேரங்களில் சில அரிய ஹார்மோன் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். உடலையும், மூளையையும் பாதிக்கும் உடல் பருமன் வெறும் தோற்ற மாற்றமல்ல. அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது நினைவாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் கற்றல் திறனை பாதிக்கும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. சிறுவயதிலேயே வரும் நோய்கள் உடல் பருமன் காரணமாக இன்று சிறுவர்களிடமும் டைப்-2 நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இதய நோய், அதிக கொழுப்புச்சத்து, கல்லீரல் கொழுப்பு நோய் போன்றவை அதிகரித்து வருகின்றன. அதிக எடையால் முழங்கால் வலி, எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக பள்ளியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் தனிமை, மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியையும் பாதிக்கிறது. பெற்றோர் கவனிக்க வேண்டியவை குழந்தைகளை மகிழ்விக்க துரித உணவுகளை வாங்கிக்கொடுப்பது பல குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. இதனால் "மகிழ்ச்சி = ஜங்க் உணவு" என்ற தவறான எண்ணம் குழந்தைகளிடம் உருவாகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் வீட்டில் தயாரிக்கும் பாரம்பரிய உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். செல்போன், தொலைக்காட்சி மற்றும் கணினி பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகளும் ஆரோக்கியமான உணவுச்சூழலை உருவாக்கி, விளையாட்டு மற்றும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/rising-childhood-obesity-hidden-risks-of-fast-food




