சென்னை, வருசநாடு மேகமலை மக்களின் நிலவுரிமையைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாகத் தலையிடுமா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட் தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாகத் தங்களின் பூர்வீக நிலங்களில் உழுதுண்டு வாழும் எளிய மக்களை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காரணம் காட்டி வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முனையும் போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் நிலவுரிமையைக் காக்கக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாநிலை, அறவழி மற்றும் காத்திருப்புப் போராட்டங்களை நாள்கணக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கப் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களத்தில் இறங்கித் தொடர்ந்து போராடி வருகின்றன. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் மதுரையில் அனைத்துக்கட்சிக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் எமது கட்சியின் சார்பில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன். நடவடிக்கை இத்தனை போராட்டங்கள் தீவிரமாக வெடித்தும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரோ, வனத்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சர்களோ அல்லது அப்பகுதிச் சட்டமன்ற உறுப்பினர்களோ எவருமே இவ்விவகாரத்தில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவோ, அவர்களது கோரிக்கைகளைக் கேட்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு தொடர்ந்து கள்ள மௌனம் சாதிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாக்களித்த குடிமக்களை நடுரோட்டில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் மக்களாட்சியின் அழகா? மேகமலை வனப்பகுதியில் வாழும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் தங்களின் வாழ்விடங்களைவிட்டு அப்புறப்படுத்தத் துடிப்பது அப்பட்டமான அநீதியாகும். காடுகளைப் பேணிப் பாதுகாக்கும் பழங்குடி மற்றும் பாரம்பரியக் குடிகளின் வாழ்வைச் சிதைத்துவிட்டு, யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீராய்வு மனு எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், வருசநாடு, மேகமலை மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற அதிகாரப்பூர்வ உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வலுவான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து மக்களின் பாரம்பரியக் குடியுரிமையை நிலைநாட்ட வேண்டும். அமைச்சர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கத் தவறினால், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் சனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-government-silent-on-the-meghamalai-issue-velmurugan-condemns




