மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, செம்பனார்கோயில் ஒன்றியம், ஆலவேலி ஊராட்சிக்கு உட்பட்ட இளையான்குடி கிராமம், செங்மேட்டுத்தெருவில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அய்யா வையனாறு ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்குச் செல்ல, பல தலைமுறைகளாகவே முறையான சாலை வசதி என்பதே கிடையாது. வயலுக்கும் வாய்க்காலுக்கும் இடையில் உள்ள மிக மிக குறுகலான, வளைந்து நெளிந்து செல்லும் ஒழுங்கற்ற ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் அவ்வூரைச் சேர்ந்த மா.இராஜாராமன் மரணித்ததைத் தொடர்ந்து, சாலை வசதி இன்மையால் ஒழுங்கற்ற ஒற்றையடிப் பாதையில் பல்வேறு இன்னல்களுக்கும் சவால்களுக்கும் இடையில் நடைபெற்ற அவரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரைக் கலங்கச் செய்தது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, "எங்களுக்குப் பல ஆண்டுகளாகச் சுடுகாட்டிற்குச் செல்ல முறையான சாலை வசதி கிடையாது. வயலின் வரப்பை ஒட்டியுள்ள ஒற்றையடிப் பாதையைத்தான் பயன்படுத்துகிறோம். அந்தப் பாதையானது ஆங்காங்கே பள்ளங்களையும், அதிக மேடுகளையும் கொண்டு பயணிக்கவே மிகவும் சிரமமாக இருக்கிறது. அங்கும் இங்குமென முட்புதர்ச் செடிகள் காடாய் மண்டிக் கிடக்கின்றன. இப்படி இருக்கும் ஒற்றையடிப் பாதையில், தனிமனிதன் நடந்து செல்வதே மிகக் கடினமான ஒன்றுதான். இதில் இறந்தவர்களின் உடலைத் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்வது என்பது மிகுந்த சிக்கலாக இருக்கிறது. சிரமத்துடனே ஒவ்வொரு இறுதி ஊர்வலமும் அமைகிறது. விஷ உயிரினங்கள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளதால், மிகுந்த கவனமும் அதீத பயமும் எப்போதும் உண்டு. அதுமட்டுமில்லாமல், வடிகால் வாய்க்காலில் இறக்கிக் கரையைத் கடந்த பின்னரே வெட்டாறு பாலத்தில் உடலை அடக்கம் செய்ய இயலும். வெயில் காலங்களில் சவால்கள் நிறைந்த பாதையை வேறு வழியின்றி எப்படியோ கடந்து அடக்கம் செய்கின்றோம். ஆனால், மழைக்காலங்களில் பாதையே தென்படாதவாறு முழுவதும் சேறும் சகதியுமாகத்தான் உள்ளது. நடக்க முடியாமல் நடந்து, இடுப்பளவு தண்ணீரில் பெரும் அவஸ்தைக்குப் பின்னரே அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் நாங்கள் வசிப்பதோ மிகச்சிறிய வீட்டில்தான். காலப்போக்கில் வீட்டின் அளவைவிட மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததன் காரணமாக, எங்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் இடப் பற்றாக்குறையின் காரணமாக இன்றும் வெளியூரில்தான் வசித்து வருகின்றனர். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் வசிப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எங்களின் தெருப் பகுதியில் உள்ள சாலைகளும் மிகக் குறுகலாகத்தான் உள்ளன. இதனால், ஒரு காரோ, டாடா ஏசியோகூட தெருவிற்குள் வர இயலாது. நாங்களும் பல அரசு அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்துள்ளோம். ஆனால், யாரும் இதுவரை செய்து கொடுத்ததே இல்லை. தற்போதுகூட எங்கள் ஊரைச் சேர்ந்த பாரதி என்பவர் முதலமைச்சர் உட்பட மற்ற முக்கிய அமைச்சர்களுக்கு, அரசு வழங்கிய அவர்களின் எண்களுக்குக் கோரிக்கை மனுவையும், வீடியோ காட்சிப் பதிவையும் அனுப்பியுள்ளார். நாங்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால், அனைத்தும் தோல்வியைத் தழுவிக்கொண்டுதான் செல்கிறது. இனியும் எங்களை உதாசீனப்படுத்தாமல், விரைந்து எங்களுக்குச் சுடுகாட்டிற்குச் செல்ல தார்ச் சாலை, பாலம் அமைத்துக் கொடுத்து, எங்களின் இருப்பிடத் தேவையையும் பூர்த்திச் செய்து கொடுங்கள்" என்றனர். இது குறித்துச் செம்பனார்கோயில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் கூறுகையில், ``மக்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து இறுதி ஊர்வலம் செல்ல 510 மீட்டர் தூரத்திற்குத் தார்ச் சாலை அமைப்பதற்காக ரூ.19,76,000 திட்ட மதிப்பீடும், அய்யா வையனாறு ஆற்றங்கரையிலிருந்து சுடுகாட்டிற்குச் செல்ல சிமெண்ட் சாலை அமைக்க ரூ.7,15,000 திட்ட மதிப்பீடும் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளோம். மேலும், 20 மீட்டர் நீளமுள்ள ஆலவேலி வடிகால் வாய்க்காலில் பாலம் அமைக்கப் பொதுப்பணித்துறை வாய்க்காலை ஆய்வு செய்து அளவு வழங்குவதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார். அடிப்படை உரிமைகளுக்காகவும், இறுதிப் பயணத்தின் கண்ணியத்திற்காகவும் இன்னும் ஒரு கிராமமே போராடிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. அதிகாரிகளின் திட்ட மதிப்பீடு வெறும் காகித வடிவில் இல்லாமல், விரைவில் தார்ச் சாலையாகவும் பாலமாகவும் மாற வேண்டும். இந்த எளிய மக்களின் கோரிக்கைக்கு அரசு உடனே செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/mayiladuthurai-lack-of-proper-roads-turns-funeral-processions-into-a-struggle




