சென்னை, மேகதாது அணையை தடுத்து, ராசிமணலில் அணை அமைக்க வலியுறுத்தும் விவசாயிகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ராசிமணலில் அணை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காவிரி நீர் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கில், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் எல்லை பகுதியில் உள்ள ராசிமணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பிரசார பயணத்தையும் போராட்டத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. நதியின் பெயர் மட்டுமல்ல காவிரி என்பது ஒரு நதியின் பெயர் மட்டுமல்ல. தமிழகத்தின் விவசாயம், குடிநீர், உணவு பாதுகாப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய உயிர்நாடியாகும். காவிரி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பது தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு சமமானது. விவசாயிகள் கோரிக்கை மேகதாது அணை தொடர்பான முயற்சிகள் தமிழகத்தின் காவிரி நீர் உரிமை குறித்து தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ராசிமணலில் அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் மாநிலம் தழுவிய பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்படும் விவசாயிகளின் இந்த கோரிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. காவிரி நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால்தான் டெல்டா உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் விவசாயம் தொடர்ந்து நடைபெற முடியும். விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள் என விவசாயத்தை சார்ந்துள்ள ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். உரிய நடவடிக்கை எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி தொடர்பான பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கவும், ராசிமணலில் அணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். துணை நிற்போம் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கைகோர்த்து நிற்கும். காவிரி உரிமையையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான அனைத்து சனநாயக போராட்டங்களிலும் உறுதியுடன் துணை நிற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-mekadatu-build-dam-at-rasimanal-says-velmurugan




