சென்னை, சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பொதுமக்கள் தரம் பிரித்து ஒப்படைத்திட மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட அன்புடன் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்: மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள். மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள். சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும். வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும். கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன் மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளிலும் வீடு தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் உருவாகும் ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, தனித்தனியாக ஒதுக்கப்பட்ட ஈரக்கழிவு மற்றும் உலர் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டிகளில் வைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கழிவுகள் உருவாககும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல் - கல்வி - தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை கழிவு உருவாகும் இடத்திலேயே (மூலத்திலேயே) முறையாகத் தரம் பிரித்து, ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி வீட்டு உபயோகக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றிற்கு சட்டப்படியாக விதிக்கப்படும் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளைத் தவிர்த்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். "திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம் - தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்." மேற்கண்டவாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/segregate-solid-waste-at-source-appeals-chennai-corporation-commissioner




