சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-பழனி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது யார்? சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புடன் அணுக வேண்டும் பெரும் சொத்து முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற காவலில் இருந்தபோதே சிறைக்குள் உயிரிழந்திருப்பது சாதாரண நிகழ்வாக கடந்து செல்லக்கூடியதல்ல. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் அரசு மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தீர்மானிக்க முடியாது அன்வர்தீனின் மரணத்திற்கான காரணத்தை விசாரணை முடிவதற்கு முன்பே எவரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், சிறைக் காவலில் நிகழ்ந்த மரணம் என்பதால், அரசு கூறும் விளக்கம் மட்டுமே இறுதியான உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தமிழக அரசின் கடமை மரணத்திற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது? சிறையில் அவருக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்ததா? உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? சிறை வளாகத்தின் கண்காணிப்பு காட்சிகள் என்ன சொல்கின்றன? அவருடன் இருந்தவர்கள் யார்? அவரது இறுதி நேரங்களில் நடந்தது என்ன? இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு தெளிவான பதில் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதிகார சங்கிலி அதேவேளையில், இந்த மரணத்தை மட்டும் முன்னிறுத்தி பழனி கோவில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடவும் கூடாது. கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கைமாறியது? அதற்கு துணை நின்ற அதிகாரிகள் யார்? பத்திரப்பதிவு நடைமுறையில் விதிமீறல்கள் எவ்வாறு நடைபெற்றன? இதன் பின்னணியில் அதிகார மையங்களின் தலையீடு இருந்ததா? ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணத்தின் பின்னால் இருந்த முழு அதிகார சங்கிலியையும் விசாரணை சென்றடைய வேண்டும். வன்மையாக கண்டிக்கிறது சிறை காவலில் இருந்த ஒருவரின் உயிரிழப்பை சுற்றி எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோவில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பை தொடாமல் இருப்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பிரேதப்பரிசோதனை அறிக்கை எனவே தமிழக அரசு, அன்வர்தீன் மரணம் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். சிறை மருத்துவப் பதிவுகள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவத் தகவல்களையும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை பழனி கோவில் நில முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அரசியல் அல்லது அதிகார பின்னணி எதுவாக இருந்தாலும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளை பொருள் அல்ல கோவில் சொத்து என்பது தனிநபர்களின் கொள்ளை பொருள் அல்ல. அது மக்களின் நம்பிக்கையால் ஒப்படைக்கப்பட்ட பொதுச்சொத்து. அந்த சொத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும், சிறைக் காவலில் நிகழ்ந்துள்ள மரணத்தையும் தனித்தனி சம்பவங்களாக பார்க்காமல், இரண்டின் பின்னணியிலும் உள்ள உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan




