கேரளா சுற்றுலா என்றாலே பலரும் கொச்சி, வாகமன், மூணாறு போன்ற வழக்கமான இடங்கள் தவிர்த்து புதுமையான இடம் தேடுவோருக்கு சொர்க்கமாக அமைகிறது கவி. கேரளாவின் 'கவி' இயற்கையின் மடியில் அமைதியாக சில நாட்கள் கழிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? மலைகள், பள்ளத்தாக்குகள், பசுமை நிறைந்த காடுகள், ஏரிகள், அரிய வனவிலங்குகள், பறவைகளின் இனிய குரல்கள் என இயற்கையின் அனைத்து அழகையும் ஒரே இடத்தில் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு கேரளாவின் 'கவி' ஒரு சிறந்த தேர்வாகும். வெளி உலகிற்கு அதிகம் அறிமுகமாகாத இந்த சுற்றுலா தலம், தற்போது இந்தியாவின் சிறந்த சூழல் சுற்றுலா மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கவி எங்கு இருக்கிறது, எப்படி செல்ல வேண்டும், காணவேண்டிய இடங்கள் ஆகியவற்றை இந்த தொகுப்பில் காணலாம். கவி எங்கு இருக்கிறது. வெளி உலகுக்கு அதிகம் தெரியாத வகையில் மறைந்த சொர்க்கமாக கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியது போல அழகாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. 2012-ம் ஆண்டு வரை, கவி என்றால் பலருக்குத் தெரியாது, கவியில் படமாக்கப்பட்ட `ஆர்டினரி’ என்ற மலையாள திரைப்படம் வெளிவந்த பிறகுதான், இது முக்கிய சுற்றுலா தலமாக மாறியது. இது பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. அருகிலுள்ள ரெயில் நிலையம் கோட்டயம் ஆகும். அங்கிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் கவி அமைந்துள்ளது. சாலைமார்க்கமாக செல்ல வேண்டுமென்றால் குமுளி மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு அமைந்திருக்கும் வண்டி பெரியார் என்னும் இடத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் கவி அமைந்துள்ளது. இந்த பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, வழியெங்கும் சலசலக்கும் நீரோடைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், அழகு சொட்டும் ஏரிகள் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. வனவிலங்குகளின் சொர்க்க பூமி கவியின் பசுமையான காடுகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, இந்திய கவுர், சாம்பார் மான், சுட்டி மான்கள், சிங்கவால் குரங்கு, நீலகிரி லாங்கூர், நீலகிரி மார்டன், மலபார் ராட்சத அணில் போன்ற பல வகையான வன விலங்குகளை காணலாம். நீங்கள் பறவை ஆர்வலராக இருந்தால், கவி உங்களுக்கான இடமாகும். 260-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுடன் கவி, பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. அடர்ந்த பசுமைக்கு நடுவே, நீரோடைகளை கண்டு, ஏலக்காயின் நறுமணத்துடன் கூடிய சுத்தமான காற்றை சுவாசிப்பது ஒரு மாயாஜால அனுபவமாக இருக்கும். மேலும் மலையேற்றம், வனவிலங்குகளை பார்ப்பதற்கான பிரத்யேக இடங்கள், முகாமிடுதல், இரவு நேர பயணம், யானை சவாரி, மரக் குடில்களில் தங்குவது போன்ற பல செயல்பாடுகளுக்கு கவி வாய்ப்பு தருகிறது. நின்னுமுள்ளி, கவி மற்றும் கொச்சுபம்பா ஏரிகளில் படகு சவாரி செய்வது, அழகிய தோட்டங்கள் வழியாக நடந்து ஏலக்காய் தொழிற்சாலையை காண்பது புதுமையாக அனுபவமாக இருக்கும். திறந்தவெளி ஜீப்பில் காலை 8 மணிமுதல் மாலை 4.30 மணி வரை கவியின் பசுமையான காடுகளில் சுற்றி வரலாம். மலையேற்றங்கள் மற்றும் காட்டுப் பயணங்களின் போது, பார்வையாளர்களுடன் வழிகாட்டிகள் உடன் வருவார்கள். கவியிலிருந்து மீனார், செந்தாமரை கொக்கா மற்றும் பள்ளத்தாக்கு காட்சி பகுதிக்கு மலையேற்றம் செய்யலாம். மலையேற்றம் அடர்ந்த காடுகளின் வழியாக செல்கிறது. மீனார் அமைதியான இடமாக இருக்கிறது. அதற்கு மாறாக செந்தாமரா கொக்கா கீழே அடர்ந்த காடுகளுடன் கூடிய ஆபத்தான பள்ளத்தாக்காக இருக்கிறது. சபரிமின் திட்டதின் பகுதிகளான ஐந்து அணைகள் இங்கு இருக்கின்றன. சபரிமலை காட்சி பகுதி மிகவும் ரம்மியமான இடம், இங்கிருந்து பார்த்தால், சபரிமலையின் அழகிய காட்சியையும், மகர ஜோதி தோன்றும் யாத்ரீக ஸ்தலத்தையும் காணலாம். கவியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலங்குகளின் எலும்புக்கூடுகள் சுற்றுலாப்பயணிகளின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. தங்கும் வசதி பகல் மற்றும் இரவு தங்கும் வசதியும் இங்கே உள்ளது. இங்கு மரகூடாரங்கள் தவிர, கேரள வன வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் பங்களாவும் இருக்கின்றன. ஆனால் இங்கு தங்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். இங்கு தங்கி கவி ஏரி மற்றும் சுற்றியுள்ள காடுகளின் கண்கவர் காட்சியை பார்க்கலாம். பயண விதிமுறைகள் பேருந்து மூலமாக பயணிக்க வேண்டுமென்றால் கேரளாவின் அரசு பேருந்துதான் சரியான தேர்வாக இருக்கும். பத்தனம் திட்டா மற்றும் குமுளியிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தங்கள் சொந்த வாகனங்களில் கவியை சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர் அனுமதி சீட்டை பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அங்கமூழி சோதனைச் சாவடியில் காலை 7 மணிக்கு சென்று வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாஸ்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 10 முதல் 30 தனியார் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆகவே சீக்கிரமாக செல்வது மிகவும் அவசியம். சொந்த வாகனத்தில் வருபவர்கள் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த அனுமதி உண்டு. ஏனென்றால் யானைகள் இங்கு அதிகளவில் காணப்படும். அப்படி அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தினால் வனத்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்வார்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், உணவுக் கழிவுகளை வனப்பகுதியில் விட்டுச் செல்வதும், வனப்பகுதியில் மது அருந்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். செல்ல ஏற்ற காலம் கவியில் எல்லா சமயங்களிலுமே அதிகபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே இருக்கும். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் கவிக்கு செல்ல சிறந்த நேரம். இந்த காலகட்டத்தில் கவியில் குளிர்ச்சியான காலநிலை நிலவும். கவியில் மழை காலத்தில் செல்ல விரும்பினால், ஜூன் முதல் செப்டம்பர் வரை உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். கவி, அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த இயற்கை வழங்கிய அரிய கொடை என்று சொன்னால் அது மிகையல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/keralas-hidden-paradise-gavi-a-tourist-destination-that-must-be-visited-at-least-once-in-a-lifetime




