கோவை, கோவை விமான நிலையம் கோவையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவையில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கோவையில் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இங்கிருந்து ஜவுளி, எந்திரங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகதான் செல்கின்றன. தொழில் நிறுவனங்கள் கோவையில் இருந்து கொச்சிக்கு விமான சேவை உள்ளது. ஆனால் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இல்லை. இதனால் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரெயில்கள், ஆம்னி பஸ்கள், கார்களில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்தும் பலர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கார்களில்தான் செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது. இதனால் தொழில் நகரான கோவை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கினால் கோவையை சேர்ந்த தொழில் துறையினர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினரும் பயன்படுத்தி கொள்வார்கள். தற்போது கோவை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் தொழில் துறையினர் கூறியதாவது:- தூத்துக்குடிக்கு விமானம் மத்திய அரசு உதான் திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சிறிய மற்றும் நடுத் தர நகரங்களை விமான பாதை மூலம் இணைக்க வழிவகுக்கிறது. இந்த திட்டம் மூலம் கோவையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்துக்கு விமான சேவையை தொடங்க வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தொழில் தொடர்பாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லை. கோவை யிலும், தூத்துக்குடியிலும் விமான நிலையம் உள்ளது. இதனால் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் இயக்கலாம். நடவடிக்கை வேண்டும் ஏ.டி.ஆர்.-72 என்ற சிறிய ரக விமானத்தில் 72 முதல் 78 பேர் வரை பயணம் செய்யலாம். முதலில் இந்த ரக விமானத்தை இயக்கலாம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தால் பெரிய விமானத்தை இயக்கலாம். அப்படி இயக்கினால் தொழில்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறுவார்கள். அதுபோன்று கோவையில் இருந்து தினமும் பலர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். இதனால் ஆன்மிக பயணம் செல்பவர்களுக்கும் இந்த விமான சேவை பயனளிக்கும். அத்துடன் திருவனந்தபுரத்துக்கும் கோவையில் இருந்து விமான சேவை இல்லை. கோவை வேகமாக வளர்ந்து வருவதால், பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை இருப்பது அவசியம். எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தயாராக உள்ளோம் கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. இது தொடர்பாக மத்திய விமான நிலைய ஆணையத்துக்கு தெரிவித்து உள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தால் விமானத்தை இயக்க தயாராக உள்ளோம் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-flight-service-from-coimbatore-to-thoothukudi-industry-expectations




