சென்னை, முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பேசியதை கண்டித்து சென்னையில் தி.மு.க.வினர் நேற்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, பெஞ்சமின், வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஆர்ப்பாட்டத்தில், ஆ.ராசா பேசியதாவது:- தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாளை குறிக்கும் இன்னொரு கருப்பு நாள் இது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், முதல்-அமைச்சர், சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் போது 'மூன்று நாள் கழித்து வருவேன், ஓடிவிடாதீர்கள்' என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தகுதியற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் ஆட்சியில் சிறு தவறுகள் நடந்தால் கூட அது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கப்பட்டது. ஆனால் உங்கள் ஆட்சியில் நடக்கும் கொடூரங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளாக சித்தரிக்கப்படுகின்றன. 7 கட்சி மாறிய ஒரு அமைச்சர். அவருக்கு ஒரு தலைவர். கை-காலை ஆட்ட ரூ.250 கோடி சம்பளம் வாங்கினீர்களே நடிப்பது என்றால் சினிமாவிலேயே இருந்திருக்கலாம். இந்த ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது. விரைவில் ஆட்சி மாறும், அதிகாரம் மாறும். தமிழ்நாடு மக்களுக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஆ.ராசா உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அமைச்சர் நிர்மல் குமார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, என்றும் அவர் வேறொரு சம்பவத்திற்காக கைதாகினார் என்றும் கூறி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எம்.பி. ஆ. ராசா, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசியது சர்ச்சைகுள்ளானது. இந்நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து சர்ச்சையக பேசிய விவகாரத்தில், திமுக எம்.பி., ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோக்களை ஆதாரமாக இணைத்து கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக எம்எல்ஏ விஜயகுமார் புகார் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-about-minister-nirmal-kumar-complaint-filed-against-dmk-mp-a-raja




