நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கல்லூரி சீனியர் ரகுவை (அர்ஜுன் தாஸ்) எதேச்சையாகச் சந்திக்கிறார் அஞ்சலி (அதிதி ஷங்கர்). கடந்த காலத்தில் ஏற்பட்ட சில அனுபவங்களால், காதல், கொண்டாட்டம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் இறுக்கமாகவே இருக்கிறார் ரகு. இவரிடம் அஞ்சலி தனது காதலைத் தெரிவிக்கிறார். முதலில் இதற்குப் பாராமுகமே காட்டுகிறார் ரகு. ஆனால், அவரை தனது காதல் சடுகுடு ஆட்டங்களால் சம்மதிக்கவைக்கப் போராடுகிறார் அஞ்சலி. ரகு, அஞ்சலியை ஏற்றுக்கொண்டாரா, அவருடைய கடந்த காலம் இதில் எத்தகைய நெருக்கடியை உண்டாக்குகிறது என்பதுதான் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கும் இந்த `ஒன்ஸ் மோர்'. Once More Review கடந்த கால அனுபவங்களால் மனதிற்குள் உண்டான காயம், அதனால் உண்டாகும் சகிப்புத்தன்மை என இறுக்கமாகவே பயணிக்கும் ரகுவாக அர்ஜுன் தாஸ். தன்னுடைய ஜோனை விட்டு வெளியே வந்து, கொடுத்த கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி, தன் பணியைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். இதைத் தாண்டி கல்லூரி கால துறுதுறு லவ்வர் பாய் வேடத்தில் வேறொரு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். காதலனைத் துரத்தி படபடவெனக் காதல் மொழி பேசும் கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாகப் புகுந்திருக்கிறார் அதிதி ஷங்கர். ஆனால், ஓரிரு இடங்களில் தலைகாட்டிவிட்டுப் போகும் செயற்கை முகபாவனைகளுக்கு 'நோ மோர்' சொல்லியிருக்கலாம். வசீகரிக்கும் கதக் நடனம், இந்திரா எதிர்கொள்ளும் கடினமான மனப்போராட்டம் என மற்றொரு நாயகியாக சோனா ஒலிக்கல், அக்கதாபாத்திரம் கோரும் விஷயங்களைத் சரியாகத் தந்திருக்கிறார். இவர்களைத் தாண்டி ஜென்சன், டிராவிட், ஜகபர் ஆகியோர் அவரவர் பணியை நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். எப்போதுமே சூரிய ஒளி வீட்டில் தெரியும் வகையிலான லைட்டிங், அத்தோடு ஆங்காங்கே லைட்டிங்கில் குளுமையை உணரச் செய்யும் தன்மை என இந்த காதல் கதைக்குத் தனித்துவமான டச் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் வேகத்தை எட்டிப்பிடிக்கும் படத்தொகுப்பாளர் நாஷ், இடைப்பட்ட காட்சிகளையும் துரிதப்படுத்தியிருக்கலாம். பாடல்களில் 'வா கண்ணம்மா', 'இதயம்', 'மீண்டுமா', 'மிஸ் ஒருத்தி', 'இந்திரா' என அனைத்திலும் ஹேஷாம் அப்துல் வஹாப் அடித்திருப்பது அட்டகாச ஹோம் ரன்! இவையாவும் 'ஒன்ஸ் மோர்' கேட்க வைக்கும் இனிமையான காதல் கீதங்களாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு! பின்னணி இசையிலும் காட்சிகள் கடத்தும் உணர்வுகளை இன்னும் ஆழமாக்கியிருக்கிறார். இது ஹேஷாம் அப்துல் வஹாபின் அடிபொலி ட்ரீட்! ஒன்ஸ் மோர் படத்தில். நாயகனைத் துரத்தும் நாயகி, அவர்களுக்கு இடையில் மலரும் காதல், இதற்கு நெருக்கடியாக நிற்கும் இறந்த காலம் என நமக்குத் தெரிந்த காதல் கதை இலக்கணத்திற்குள்ளாகவே படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். கடந்த காலம் உண்டாக்கிய வலி, அதனால் இறுக்கமாகவே சுற்றும் நாயகன் ரகுவைத் துரத்தும் அஞ்சலி எனப் படத்தின் ஆரம்பமே கதையோடுதான் தொடங்குகிறது. நாயகனை இம்ப்ரஸ் செய்ய நாயகி செய்யும் விஷயங்கள், நாயகனுக்கு உண்டான மனமாற்றம் என முதல் பாதியின் இடைப்பகுதியில் செயற்கைத்தனம் நிரம்பிய காதல் கீச்சொலிகள் ஆங்காங்கே கேட்கின்றன. ஆனால் சாதாரணமான வசனங்கள் மற்றும் காட்சிகளில்கூட கவித்துவம் சேர்த்து புன்முறுவலை உண்டாக்கும் பார்முலா ஓரளவு கைகொடுத்திருக்கிறது. Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா? இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து, இடைவேளை நெருங்கும்போது மீண்டும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது திரைக்கதை. இதன் பிறகு நாயகனுக்கு எப்படியான நெருக்கடிகள் உருவாகப் போகின்றன என்கிற பரபரப்போடும், எதிர்பார்ப்போடும் இரண்டாம் பாதியை நோக்கி நம்மை நகர்த்துகிறது படம். ஆனால், உடனே வழக்கமான டெம்ப்ளேட் ஃபிளாஷ்பேக்கிற்கு திரைக்கதை டூர் போவதால் சுவாரஸ்யமில்லாமல் டேட்டிங் போகின்றன சில காட்சிகள். பழைய காதலியின் மனமாற்றத்திற்கும் பிரிவுக்குமான காரணம் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாமே இயக்குநரே? Once More Review ஆனால், இதன் பிறகு க்ளைமாக்ஸில் நாயகன் எடுக்கும் முடிவு, அங்கே பரிமாறப்படும் காதல் மொழி, படத்தின் முதல் பாதியில் நிகழ்ந்த சின்ன சின்ன விஷயங்களை இறுதியில் சேர்த்த விதம் ஆகியவை அழகான ஹைக்கூக்கள்! ஹவுஸ் ஹஸ்பண்ட் டிராவிட், தன்பாலின ஈர்ப்பாளர் ஜகபர் ஆகிய கதாபாத்திரங்களை இந்த 'ஒன்ஸ் மோர்' உலகத்திற்குள் துருத்தலாகத் தெரியாமல் உள்ளே கொண்டு வந்த ஐடியாவுக்கும் லைக்ஸ் ப்ரோ! பழக்கப்பட்ட காதல் கதையில் சுவாரஸ்யத்தை மட்டும் கூடுதலாகத் துணைக்குச் சேர்த்திருந்தால் இந்த `ஒன்ஸ் மோர்' படத்தைத் திகட்டத் திகட்டக் கொண்டாடியிருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/arjun-das-aditi-shankar-starrer-once-more-movie-review




