சென்னை, கடன் விவகாரத்தில் கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு: முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- காஞ்சீபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த தேன்மொழி என்ற ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிருந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, அவர் மற்றும் அவரது கணவர் ஆனந்தன் ஆகியோர் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த ரூ. 20,000 முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்டனம் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் இந்தச் செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆழ்ந்த இரங்கல் இந்த சம்பவம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உட்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-woman-child-die-in-loan-case-a-thorough-investigation-should-be-conducted-premalatha




