முதியவர்களைப் பேணுவது என்பது கடமை அல்ல, அது தார்மீக அறம், பொறுப்பு. டிஜிட்டல் உலகம் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு பலரும் பழகிவிட்டார்கள். கால ஓட்டத்திற்கு இணையாக வாழ்க்கை சக்கரத்தையும் வேகமாக சுழற்ற தொடங்கி விட்டார்கள். அத்தகைய வேக ஓட்டத்திற்கு மத்தியில் பலரும் தங்களுக்கு வழிகாட்டியாக, துணை நின்ற, வளர்த்து ஆளாக்கிய 'முதுமையை' மறந்துவிடுகிறார்கள் அல்லது ஓரம் கட்டிவிடுகிறார்கள். ஒரு மரம் உயரமாக வளர்ந்து நிழல் தருகிறது என்றால், அதற்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வேர்கள் தான் காரணம். குடும்பம் எனும் மரத்திற்கு முதியவர்கள் தான் அந்த வேர்கள். அவர்களைப் பேணுவது என்பது கடமை அல்ல, அது தார்மீக அறம், பொறுப்பு. அனுபவப் பாடம் இன்றைய இளைஞர்களிடம் தொழில்நுட்ப அறிவு இருக்கலாம். ஆனால் முதியவர்களிடம் 'வாழ்க்கை அறிவு' மிகுந்திருக்கிறது. நாம் இணையத்தில் தேடிப்பெறும் தீர்வுகளை விட, நம் தாத்தா-பாட்டியிடம் ஒரு நிமிடம் பேசினால் கிடைக்கும் தீர்வு எதார்த்தமானதாக இருக்கும். அவர்கள் சந்தித்த சவால்கள், தோல்விகள் மற்றும் வெற்றிகள் ஒவ்வொன்றும் நமக்கு சிறந்த வாழ்க்கை பாடமாக அமையும். தனிமை எனும் நோய் இன்றைய சூழலில் முதியவர்கள் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை பணத்தட்டுப்பாடு அல்ல, 'தனிமை'. ஒரே வீட் டில் இருந்தாலும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் தங்களுடன் பேசுவதில்லை என்ற ஏக்கம் பல முதியவர்களை மனதளவில் பாதிக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் வேலை செய்ய முடியாதபோது, தாங்கள் குடும்பத்திற்குச் சுமையாக இருப்பதாக அவர்கள் நினைக்க தொடங்குகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றும் பொறுப்பு குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறது. முதியவர்களை கொண்டாடுவோம் ஒரு நாளைக்குக் குறைந்தது 15 நிமிடங்கள் அவர்களுடன் அமர்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பேசுங்கள். அது அவர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தரும். மன நிம்மதியும், மன அமைதியும் அடைந்து விடுவார்கள். வீட்டு விஷயங்களில் அல்லது முக்கிய முடிவுகளில் அவர்களிடம் ஆலோசனை கேட்டுப்பாருங்கள். அவர்களை குடும்பத்தின் ஒரு அங்கமாக உணரவைக்கும். முதிய வயதில் ஏற்படும் சிறு உடல்நலக் குறைபாடுகளை கூட அலட்சியப்படுத்தாமல் கவனிப்பதும், முறையான பரிசோதனைகள் செய்வதும் அவசியம். கற்றுக்கொள்ளல் குழந்தைகளுக்கு ஏராளமான சந்தேகங்கள் எழும். முதலில் பெற்றோரிடம் கேட்டு தெளிவு பெற முயற்சிப்பார்கள். ஒருகட் டத்தில் அவர்கள் எரிச்சலடையும்போது, தாத்தா-பாட்டி மிகவும் பொறுமையாக பதிலளிப்பார்கள். இந்த 'கேட்டல்' பண்பு தான் குழந்தைகளை அவர்களுடன் அதிகம் நெருங்கச் செய்கிறது. கைவினைப் பொருட்கள் தயார் செய்வது, செடிகள் வளர்த்து தோட்டமாக பராமரிப்பது, பாரம்பரிய உணவுகளை சமைப்பது போன்றவற்றை தாத்தா-பாட்டியிடமிருந்து குழந்தைகள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வார்கள். கையாளும் திறன் அன்பும் கவனமும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் அடிப்படை தூண்கள். முதியவர்களுக்கு கொடுக்கப்படும் சிறிய அக்கறையும், மரியாதையும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு. குடும்பத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். இன்றைய காலகட்டத்தில் பொறுமையும் புரிதலும் மிக அவசியமானவை. தலைமுறைகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை சமநிலையுடன் கையாளும் திறன் முதியவர்களிடம் உண்டு. இளம் தலைமுறையும், முதியவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்தால். உறவுகள் மேலும் வலுவாகும். குடும்ப ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். நாம் இன்று முதியவர்களை எப்படி நடத்துகிறோமோ, அப்படித்தான் நாளை நாமும் நடத்தப்படுவோம். 'முதியோர் இல்லங்கள் இல்லாத சமூகம்' என்பது வெறும் கனவாக இல்லாமல் நனவாக வேண்டும். முதுமையைச் சுமையாக கருதாமல், அவர்கள் குடும்பத்திற்காக செய்த தியாகங்களுக்காக அன்பை நன்றிக்கடனாகத் திருப்பிக் கொடுப்போம். வாழ்வின் பெரும் பகுதியை தனக்காக வாழாமல் குடும்பத்திற்காகவே செலவிட்ட அவர்களின் தன்னலமற்ற வாழ்வியலை போற்றுவோம். அவர்களுக்கு உயரிய மரியாதையை கொடுப்போம். முதியவர்கள் இருக்கும் வீடு, ஆசீர்வதிக்கப்பட்ட வீடு! குழந்தைகளுடன் பிணைப்பு தாத்தா-பாட்டிக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையிலான உறவு மிகவும் அற்புதமானது. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லவும், நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ளவும் அந்த இடைவெளியை ஒரு பாலமாக மாற்றுங்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப் பட்டு 'கண்டிப்பு' என்னும் முகமூடியை அணிந்திருப்பார்கள். ஆனால், தாத்தா-பாட்டியிடம் அத்தகைய நெருக்கடி இல்லை. இன்றைய போட்டி நிறைந்த உலகில், தாத்தா-பாட்டியின் அரவணைப்பு குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும். தங்கள் குடும்பம் எங்கிருந்து வந்தது? முன் னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? போன்ற வரலாற்றை தாத்தா-பாட்டிகள் சொல்லும்போது, குழந்தைகளுக்கு தங்கள் அடையாளம் குறித்த பெருமிதம் ஏற்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-elderly-are-not-burdens-to-the-house-they-are-treasures




