புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் 6 மாத கர்ப்பிணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரெட் சாப்பிட்டபோது மூச்சுத்திணறி இறந்ததாக நாடகமாடிய அவரது நாத்தனார்கள், மாமியார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 35). இவர் நெடுஞ்சாலை பணிகளில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா (21), 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டித்துரையின் சகோதரிகள் பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகியோர் தங்களது கணவர்களை பிரிந்து பாண்டித்துரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பாண்டித்துரை வேலைக்காக ஈரோடு சென்று விட்டார். சந்தேக மரணம் கடந்த 30-ந்தேதி அதிகாலை 6.30 மணிக்கு சந்தியா காலை உணவாக பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு அதனால் மூச்சுத்திணறல் உண்டாகியதாக கூறி, அவரை வீட்டில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கணேஷ் நகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை இதற்கிடையே அன்று மாலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், சந்தியா இயற்கை முறையில் இறக்கவில்லை என்பதும், கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சந்தேக மரண வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். அதன்பின்னர் போலீசார் பாண்டித்துரை உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி (50) மற்றும் உறவினர்கள் கனிமொழி (27), செல்வி (38), கார்த்தி (24) ஆகிய 6 பேரும் சேர்ந்து சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:- சந்தியாவின் நாத்தனார்களான பாண்டிமீனா, பொற்கொடி ஆகிய இருவரும் வாலிபர்களுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்தனர். இதுகுறித்து சந்தியா, தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாண்டித்துரை தனது சகோதரிகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த கணவரின் வீட்டார் சந்தியாவை கொலை செய்ய திட்டமிட்டனர். பாண்டித்துரை வெளியூர் சென்றதை பயன்படுத்தி நாத்தனார்கள், மாமியார் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்தியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொடூரமாக கொலை செய்தனர். இதையடுத்து கொலையை மறைத்து இயற்கை மரணம் போல காட்டுவதற்காக, சந்தியாவின் வாயிலும், மூக்கிலும் பிரெட்டை திணித்தும், பாலை வாயிலும், மூக்கிலும் ஊற்றியுள்ளனர். பின்னர் பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்று நாடகமாடியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சிறை இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்தியை புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், பாண்டி மீனா, பொற்கொடி, கனிமொழி, செல்வி, பானுமதி ஆகியோரை திருச்சி பெண்கள் தனிச் சிறையிலும் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-6-month-pregnant-woman-in-pudukottai-6-people-including-nathanaar-mother-in-law-arrested




