மதுரை, ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு தொண்டுகள் செய்வதற்காக அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு சமய பணிகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் மற்றும் 6 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்துகள் உள்ளன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மேற்கண்ட அறக்கட்டளை வழியாக திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது. அந்த சொத்துக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகளே பராமரிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். சொத்தின் மதிப்பு ரூ.600 கோடி அந்த நிலத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சமய பணிகளுக்கு பயன்படுத்த முடியும். அந்த நிலத்தை விற்பதோ, வாங்குவதோ இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மேற்கண்ட நிலமானது, தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலமாக கிரையப்பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிலத்தை வாங்கிய நபர்கள் இப்போது அதனை வகை மாற்றி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை கிரையம் செய்ததற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த அறக்கட்டளை சொத்தின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்திரப்பதிவு செய்ய தடை இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேற்கண்ட அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை வகை மாற்றி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தால் அதனை ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், திருச்சி மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-registering-land-worth-600-crore-donated-to-srirangam-temple-as-housing-plots




