காலத்தின் சுழற்சியில் தேசங்களின் எல்லைகளும், நூற்றாண்டுகளின் இடைவெளிகளும் மறைந்துபோகலாம். ஆனால், மனித உணர்வுகளும், குருதியின் வழியே வழியும் பாசத் தேடலும் என்றும் மங்கிப்போவதில்லை! அதற்குச் சான்றாக, ஆஸ்திரேலியாவில் இருந்து புதுக்கோட்டை மண்ணிற்குத் தன் தாத்தாவின் அசைக்க முடியாத நினைவுகளைத் தேடி ஓடோடி வந்துள்ளார் ஒரு பேரக் குழந்தை. ஃபேஸ்புக் மூலம் மலர்ந்த வரலாற்றுத் தேடல்! புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாகக் கடந்த 1934 முதல் 1946-ம் ஆண்டு வரை ஆளுமைமிக்க நிர்வாகத்தைச் செய்தவர் சர் அலெக்சாண்டர் ராபர்ட் லோஃப்டஸ் டோட்டன்ஹாம் (Sir Alexander Robert Loftus Tottenham CIE). இவருடைய பேரன் இயன் கெண்டல் (73). இவர் தனது மனைவி ஹெலன் கெண்டலுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். கடல் கடந்து வாழும் இயன் கெண்டலுக்கு, தான் நேரில் பார்த்திராத தன் தாத்தா பணியாற்றி வாழ்ந்த புதுக்கோட்டை மண்ணைப் பற்றியும், அவரது வரலாற்றுச் சுவடுகளைப் பற்றியும் அறிய நீண்ட நாட்களாகவே ஏக்கம் இருந்தது. சர் அலெக்சாண்டர் ராபர்ட் லோஃப்டஸ் டோட்டன்ஹாம் அந்த ஏக்கத்தின் விளைவாக, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தனது தாத்தா குறித்த தேடலைத் தொடங்கினர். இயன் கெண்டலின் உறவினர் சிமோன் ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்வியைக் கண்ட புதுக்கோட்டை சமஸ்தான இளையமன்னர் விஜயகுமார் தொண்டைமான், உடனே அவரோடு ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். மேலும், டோட்டன்ஹாம் புதுக்கோட்டைக்குச் செய்த மகத்தான சேவைகள் மற்றும் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய புத்தகங்களையும், ஆவணங்களையும் உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார். அந்தப் புத்தகங்கள் இயன் கெண்டலின் தந்தையையும் சகோதரரையும் சென்று சேர்ந்தன. அவற்றைப் படித்துப் பார்த்து வியந்துபோன இயன் கெண்டலுக்கு, புதுக்கோட்டைக்கு நேரில் சென்று தன் தாத்தா வாழ்ந்த மண்ணைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மிக உறுதியானது. மன்னர் குடும்ப வரவேற்பும் உணர்ச்சிப் பெருக்குக் கல்லறையும்! உடனே தனது மனைவியுடன் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டு வந்த இயன் கெண்டல் தம்பதியினரை, விஜயகுமார் தொண்டைமான் நேரில் சந்தித்துத் தமிழ் மண்ணின் விருந்தோம்பலோடு வரவேற்றார். தொடர்ந்து, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 'ராஜமாதா' மகாராணியார் ரமாதேவி தொண்டைமானின் 87-ஆவது பிறந்த நாள் நிகழ்விலும் இயன் கெண்டல் தம்பதியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன்பின்னர், புதுக்கோட்டை மச்சுவாடி டி.எல்.சி. சர்ச்சில் அமைந்துள்ள திவான் டோட்டன்ஹாமின் கல்லறைக்கு இயன் கெண்டல் அழைத்துச் செல்லப்பட்டார். இத்தனை ஆண்டுகளாகப் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே கண்ட தன் தாத்தாவின் கல்லறையைக் கண்ணெதிரே கண்டதும், இயன் கெண்டல் கொஞ்சம் உடைந்து நின்றார். உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் பேச்சையிழந்த அவர், கல்லறையின் மீது மலர்களைத் தூவி, தன் இரு கரங்களாலும் அதைத் தழுவி, கட்டிப்பிடித்தபடி விம்மினார். பல தசாப்தங்களாகத் தேக்கி வைத்த பாசம் முழுவதும் கண்ணீராக வழிந்தோடிய அந்த நொடி, அங்கிருந்த அனைவரது நெஞ்சையும் கரைய வைத்தது. கலெக்டர் பங்களா மற்றும் வளர்ப்பு நாயின் சமாதி! தொடர்ந்து, அன்றைய 'சம்மர் பேலஸ்' (Summer Palace) என்று அழைக்கப்பட்ட தற்போதைய மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுவரில் கம்பீரமாக மிளிரும் தாத்தாவின் உருவப்படத்தையும், டாட்டன்ஹாம் மிகுந்த ஆசையோடு வளர்த்த 'ரிங்' (Ring) என்ற செல்ல நாயின் சமாதியையும் அவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் பார்த்து மகிழ்ந்தனர். அஞ்சலிக்குப் பின்னர் பேரப்பிள்ளை இயன் கெண்டல் நெகிழ்ச்சியுடன், "நாங்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும், என் தாத்தாவின் விருப்பப்படி தொண்டு நிறுவனங்களுக்காக வழங்கப்பட்ட நிதி மூலம் உதவிகள் செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்த புதுக்கோட்டை மண்ணில் காலடி வைத்தபோதுதான் என் தாத்தாவை இந்த ஊர் மக்கள் வெறும் அதிகாரியாகப் பார்க்காமல், தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நேரில் கண்டேன். இங்குள்ள மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பும் காட்டிய அன்பும் வாழ்நாளில் மறக்க முடியாதது!" என்றார். யார் இந்த சர் அலெக்சாண்டர் டோட்டன்ஹாம்? 1873 ஜூலை 31 அன்று பிறந்த அலெக்சாண்டர் டோட்டன்ஹாம், 1896-இல் இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்று, 1897 டிசம்பர் 5 அன்று இந்தியா வந்தார். சென்னை மாகாணத்தில் மாவட்ட ஆட்சியராகவும், 1924-இல் இந்தியாவின் நடுவண் வருவாய் வாரியம் (Central Board of Revenue) அமைக்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும், வருமான வரித்துறை தலைமை ஆணையராகவும் (Chief Commissioner of Income Tax) கடமையாற்றினார். 1925-இல் CIE பட்டமும், 1931-இல் 'சர்' (Sir) பட்டமும் பெற்ற இவர், 1934 முதல் 1946 வரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாகப் பணியாற்றினார். சிறுவயதாக இருந்த மகாராஜா மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஒரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் இருந்து சமஸ்தான நிர்வாகத்தைச் சிறப்பாக வழிநடத்தினார். டாட்டன்ஹாம் ஒரு ஆங்கிலோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ராபர்ட், ஜிஞ்சர் என்ற இரு மகன்கள் இருந்தனர். பின்னர் கல்கத்தாவில் குடியேறிய குடும்பத்தினர், இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய கலவரக் காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தனர். ஓய்வு பெற்ற பிறகு தாய்நாடு சென்ற டாட்டன்ஹாம், புதுக்கோட்டை மீதான பற்றினால், "I am coming back to India to lay my bones" ('என் எலும்புகளைப் புதைக்க நான் இந்தியாவுக்கே வர்றேன்') என்று கடிதம் எழுதிவிட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கே திரும்ப வந்து இங்கேயே மறைந்தார். புதுக்கோட்டை சமஸ்தான மகாராணியார் ராஜமாதா ரமாதேவி தொண்டைமானின் இளைய மகன் விஜயகுமார் தொண்டைமானிடம் இதுபற்றி பேசினோம். "ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திவான் டோட்டன்ஹாமின் பேரன் இயன் கெண்டலின் உறவினர் சிமோன் என்பவர் ஃபேஸ்புக்கில் தனது தாத்தாவின் புதுக்கோட்டை நினைவுகள் குறித்து ஒரு கேள்வியைப் பதிவிட்டிருந்தார். அதை நான் பார்த்ததும், உடனடியாக அவர்களுடன் ஃபேஸ்புக் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். சர் அலெக்சாண்டர் டோட்டன்ஹாம் அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குச் செய்த மகத்தான சேவைகள், வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை உடனே அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்த நூல்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இயன் கெண்டலின் தந்தையையும் சகோதரரையும் சென்றடைந்தன. அந்த வரலாற்று ஆதாரங்களைப் படித்த பிறகுதான், தங்கள் தாத்தா வாழ்ந்து தொண்டாற்றிய புதுக்கோட்டை மண்ணிற்கு நேரில் செல்ல வேண்டும் என்ற தீராத விருப்பம் இயன் கெண்டலுக்கு எழுந்தது. அதன்படியே அவர் இங்கு வந்தார். சர் அலெக்சாண்டர் டோட்டன்ஹாம் புதுக்கோட்டைக்குச் செய்த அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. 1928 முதல் 1934 வரை திவானாக இருந்த என் தாயாரின் தாத்தா குன்னுண்ணி மேனனுக்குப் பிறகு, டோட்டன்ஹாம் அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வெறும் திவானாக மட்டுமின்றி, மகாராஜா,என் தந்தை, மற்றும் கார்த்திக் தொண்டைமானின் தந்தை ஆகிய மூவருக்கும் ஒரு நல்ல ஆசிரியராகவும், தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து சமஸ்தானத்தையும் அரச குடும்பத்தையும் சிறப்பாக வழிநடத்தினார். இன்று அரசு அலுவலகங்களில் மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும், கோப்புகளைப் பராமரிக்கும் 'டாட்டன்ஹாம் ஃபைலிங் முறையை' இந்திய அளவிலேயே அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். அதுமட்டுமின்றி, மத்திய வருவாய் வாரியத்தின் (Central Board of Revenue) நிறுவன உறுப்பினராகவும், வருமான வரித்துறை தலைமை ஆணையராகவும் பணியாற்றி மாபெரும் முத்திரை பதித்தவர். அவர் தனது மறைவுக்குப் பிறகு சமூக நலப்பணிகளுக்காகவும் ஏழைகளுக்கு உதவுவதற்காகவும் அப்போதே ரூ.10,000 அறக்கட்டளை நிதியை எழுதி வைத்திருந்தார். அந்த நிதியைக் கொண்டு என் தாயார் மகாராணியார் ரமாதேவி தொண்டைமான் அவர்கள் பல தசாப்தங்களாக ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்துவந்தார். என் தாயாரின் மறைவுக்குப் பின், இன்றளவும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மச்சுவாடி சர்ச்சில் ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த டிசம்பர் 13-ஆம் தேதியை 'டோட்டன்ஹாம் தினமாக' (Tottenham Day) அனுசரித்து, ஏழைகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அவர் புதுக்கோட்டையைத் தன் சொந்த ஊராகவே நேசித்தார். தாய்நாடு சென்றபோதும், 'என் எலும்புகளைப் புதைக்க நான் இந்தியாவுக்கே வருகிறேன்' (I am coming back to India to lay my bones) என்று கடிதம் எழுதிவிட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கே வந்து தன் வாழ்நாளை இங்கேயே முடித்துக்கொண்டார். அவர் ஆசையாக வளர்த்த 'ரிங்' (Ring) என்ற செல்ல நாயின் சமாதி கூட இன்றளவும் ஆட்சியர் பங்களாவில் பத்திரமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது." என்றார் நெகிழ்ச்சியுடன். தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், "மறைக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்.' என்ற வரலாற்று நூல் ஆசிரியருமான கே.எம். ஷெரீப்பிடம் இதுபற்றி பேசினோம். "டோட்டன்ஹாம் அந்நிய நாட்டவராக இருந்தாலும் 'என் எலும்புகள் இந்த புதுக்கோட்டை மண்ணில்தான் மக்க வேண்டும்' என்று கூறி இங்கேயே அடக்கமானவர். நிர்வாகத்தில் அரசு அலுவலகங்களில் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர். இயற்கைப் பாதுகாப்பில் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும் 'டோட்டன்ஹாம் மரங்களை' நட்டதோடு, புதுக்கோட்டையின் 36 குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துச் சிறந்த நீர்ப்பாசன முறையை உருவாக்கினார். மேலும், ஏழை பிள்ளைகளின் கல்விக்காகத் தனது சொத்துக்களை 'புவர் ஹோம்' (Poor Home) அமைப்புக்கு எழுதி வைத்தார். இந்திய சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த மாபெரும் அதிகாரியான வி.பி. மேனன் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சிறந்த நிர்வாகத்தைக் குறிப்பிட்டு, புகழ்பெற்ற திவான் ஏ. சேஷய்ய சாஸ்திரியாருடன் இணைந்து சர் அலெக்சாண்டர் டோட்டன்ஹாமை 'புதுக்கோட்டை பெற்றெடுத்த மிகச்சிறந்த முதன்மை நிர்வாகி' என்று தனித்துக் குறிப்பிட்டு உயர்வாகப் பாராட்டியுள்ளார்." என்றார் பெருமையுடன். தலைமுறைகள் கடந்தாலும், எல்லைகள் பிரித்தாலும். ஒரு நல்ல மனிதனின் நற்செயல்களும், குருதியின் பாச உணர்வும் என்றுமே அழியாது என்பதற்கு இந்த ஆஸ்திரேலிய பேரனின் வருகை ஓர் உன்னதமான வரலாற்றுச் சான்றாக அமைந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/features/human-stories/facebook-helps-australian-grandchild-trace-pudukkottai-diwans-roots




