பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு 4.9.2026 (நாளை) வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு அலங்காரம் செய்து, கிருஷ்ணரை வரவேற்று பூஜைகள் செய்தும், விதவிதமான பலகாரங்களை செய்து படையலிட்டும் வழிபடுகிறார்கள். இதேபோல் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்துகொண்டு பகவானை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். பூஜை செய்வது எப்படி? வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும். பூஜை அறை அல்லது பூஜை செய்யக்கூடிய பகுதியில் மலர்களால் அலங்காரம் செய்யலாம். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீடு முழுவதும் அலங்காரம் செய்து கிருஷ்ணரை வரவேற்கலாம். கிருஷ்ணர் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், வாசனை மலர்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். வாசலில் இருந்து பூஜை செய்யக்கூடிய இடம் வரை, அரிசி மாவினால் குழந்தைகளின் பாதச் சுவடுகளை பதிக்க வேண்டும். அல்லது கைகளால் வரையலாம். இதன்மூலம் கண்ணனே பூஜையை ஏற்க வீடு தேடி வருவதாக ஐதீகம். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழலாம். இவ்வாறு குழந்தைகள் குதூகலமாக இருப்பதைப் பார்த்து பகவான் கிருஷ்ணரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து அருளை வாரி வழங்குவார். என்னென்ன பலகாரங்கள்? பூஜையின்போது பகவான் கிருஷ்ணருக்கு வெண்ணெய், பால், தயிர், அவல், பால் பாயசம், லட்டு, முறுக்கு, சீடை, அதிரசம், பலவிதமான இனிப்புகள் ஆகியவற்றை படைக்கலாம். வசதி இல்லாதவர்கள் சிறிதளவு வெண்ணெய் மற்றும் வெல்லம் கலந்த அவல் மட்டும் நைவேத்யமாக படைக்கலாம். பூஜையின்போது பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான துளசியால் அர்ச்சனை செய்யலாம். துளசி அர்ச்சனை செய்ய முடியாவிட்டால் சிறிது துளசி இலைகளை மட்டுமாவது கிருஷ்ணரின் பாதங்களில் சமர்ப்பித்து, கிருஷ்ணரின் நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். கிருஷ்ண அஷ்டோத்திரம், கிருஷ்ணர் 108 போற்றி மந்திரங்கள், கிருஷ்ணர் சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று தொடர்ந்து உச்சரித்தும் அர்ச்சனை செய்யலாம். பின்னர் தீபாராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜை செய்யும் நேரம் நாளை அதிகாலை முதல் இரவு வரை ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் இணைந்து இருப்பதால் அந்த நேரத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப வீடுகளில் பூஜை செய்யலாம். பெரும்பாலான கோவில்களில் கிருஷ்ணர் அவதரித்த நள்ளிரவு நேரத்திலேயே பிரதான பூஜை மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/krishna-jayanthi-celebration-how-to-perform-puja-at-home



