சென்னை, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மழைநீர் வடிகால் பணிக்காகப் பள்ளங்கள் தோண்டப்படும்போது, அவற்றைச் சுற்றி உரிய தடுப்புச் சுவர்கள், எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட முறையாகச் செய்யப்படாததே ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் மழைநீர் வடிகால் பணிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ‘மரண வடிகால்’ பணிகளாக மாறி வருவது வேதனைக்குரியது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளால் பெண் ஒருவரின் உயிர் பறிபோன பின்னர் விசாரணை நடத்துவதும், அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்வதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதை தவெக அரசு இனியாவது உணர வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படாத வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drain-works-must-be-completed-with-proper-safety-measures-ttv-dhinakaran




