சென்னை, சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குதிரை பேரம் நடத்துவதாக த.வெ.க. மீது குற்றம் சாட்டியிருந்தார். மு.க.ஸ்டாலின் பேச்சு மறுபுறம் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. அரசு நடைபெறுகிறது. எனவே தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறினார். த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு பேரம் நடைபெறுவதாக தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சமீபத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சை சுட்டிக்காட்டி இருந்தனர். இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, கடந்த 29-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார், லஞ்ச ஊழல் தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 3 பேர் கைது இந்த வழக்கு தொடர்பாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ் ஆகிய 3 பேர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சென்னை போலீசார் கரூர் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அவர்கள் இருவரும் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தை சேர்ந்த செல்வன் (வயது 54), சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் (46), அஸ்தினாபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜேஷ் (43) ஆகிய 3 பேரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். இவர்களுக்கும், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசோடு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்ததால், அங்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு வைத்து செல்வன், சீனிவாசன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். நேற்று காலை அவர்கள் 3 பேரும் பலத்த காவலுடன் சென்னை அழைத்துவரப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு, இவர்கள் 3 பேர்களோடு, கரூரில் கைது செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோரை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டோர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், அவருடைய தம்பி அசோக்குமாரும் கூறியதன்பேரில் இந்த பேரத்தை நடத்தியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைதானவர்கள் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளனர். ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து சதித்திட்டம் தீட்டி உள்ளது அம்பலமாகி உள்ளது. ஒரு வாரம் நட்சத்திர ஓட்டலில் திட்டமிட்ட நிலையில் இந்த விவகாரம் கசிந்ததால் ஓட்டலை விட்டு அவசர அவசரமாக காலி செய்தோம் என்று அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தை காவல்துறை கண்டறிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-180-crore-to-overthrow-tvk-regime-arrested-persons-make-sensational-confession




