புதுக்கோட்டை, ஓடும் பஸ்சில் தானியங்கி கதவு திறந்ததால் கீழே விழுந்து 10 மாணவிகள் காயமடைந்தனர். டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். அரசு நகர பஸ் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி 8-ம் எண் அரசு நகர பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி என மொத்தம் 10 பேர் அந்த பஸ்சில் ஏறினர். தானியங்கி கதவு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் பஸ்சின் தானியங்கி கதவு மூடப்பட்டது. அங்கிருந்து பஸ் புறப்பட்டு, சுமார் 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, தானியங்கி கதவு திடீரென திறந்துள்ளது. இதில் படிக்கட்டில் நின்று கொண்டி ருந்த மாணவிகள் 10 பேரும் எதிர்பாராதவிதமாக ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் தவறி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் காயமடைந்த 10 மாணவிகளையும் மீட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், 'ஓடும் பஸ்சில் இருந்து மாணவியை கண்டக்டர் கீழே தள்ளிவிட்டதாக ஒரு தரப்பினரும், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி மாணவி கீழே விழுந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மையான காரணம் இதுதொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். விபத்து நடந்த பகுதியில் கடந்த 3, 4 மாதங்களாகவே அரசு பஸ்களில் மாணவர்களை ஏற்றுவது இல்லை, நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கூட்ட நெரிசலே இந்த விபத்துக்கு பின்னணியாக இருந்ததால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும்' என்றார். சாலை மறியல் இதற்கிடையே ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகள் பஸ்சில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் பஸ் டிரைவர் அர்ஜூனன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். டிரைவர் சஸ்பெண்ட் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் கூறுகையில், 'கீரனூரில் நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் புதுக்கோட்டை நோக்கி செல்லும்போது பஸ்சில் 90 பயணிகள் இருந்தனர். 9.05 மணிக்கு ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் மேலும் 30 பயணிகள் மற்றும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன்படிக்கட்டின் அருகில் உள்ள தானியங்கி கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முன் படிக்கட்டு கதவு திறந்ததில், படியில் நின்ற மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார். இதற்கிடையே பஸ் டிரைவர் அர்ஜூனனை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக ஊழியரான கண்டக்டர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்தும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தர விட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened




