கோவை, கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர் கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி இவருடைய மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். அந்த அறையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் (19) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர். அமுதன், ஸ்ரீமன் ஆகியோர் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். சரமாரியாக தாக்குதல் அப்போது அதே கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் அந்த 2 பேரையும் மிரட்டி தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, நீங்கள் தானே நேற்று எங்கள் அறைக்கு வந்து தாக்கிவிட்டு செல்போனை பறித்தது என்று கேட்டனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பரிதாப பலி இதையடுத்து 2 பேர், அமுதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி விடுதியில் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமுதன் மயங்கி கிடந்தார். மதியம் 1.30 மணிக்கு சாப்பிட வந்த மாணவர்கள் அறையில் அமுதன் அசைவற்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அமுதனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணி பாலு, 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முகமூடி விலகியது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:- கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதனின் நண்பர்கள் பலர் ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டியில் அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்களின் அறைக்கு அமுதன் அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு 3-ம் ஆண்டு படிக்கும் 9 மாணவர்கள் கடந்த 9-ந் தேதி காலை முகமூடி அணிந்து சென்று உள்ளனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன்களை பறித்துள்ளனர். அவர்களுடன் அமுதனும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அமுதன் முகத்தில் அணிந்து இருந்த முகமூடி விலகியதால் அவரை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதன் காரணமாக அமுதனை தாக்கி உள்ளனர். அதில் அமுதன் உயிரிழந்து உள்ளார். மேலும் 4-ம் ஆண்டு மாணவர்களிடம் செல்போன்களை பறித்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். போதைப்பொருள் விற்பனை இந்நிலையில் கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/five-people-including-a-17-year-old-boy-arrested-in-the-coimbatore-college-student-murder-case



