24 வயது, ஆதார் அட்டை இல்லை. வாக்காளர் அட்டை இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. இருப்பிடச் சான்றிதழ் இல்லை. அரசின் எந்த அடிப்படை ஆவணமும் இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களைச் சுற்றி வருகிறார் கோவை வடக்கு வட்டம் 2-க்கு உட்பட்ட கூடலூர் வடக்கு கிராமம், நந்தினி காலனியைச் சேர்ந்த இளைஞர் சீனு. தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறைச் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் புதிரை வண்ணார் இன மக்களுக்கான சமூக சான்றிதழ்கள் மற்றும் பிற அடிப்படை சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த முகாமிலாவது என்னுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படுமா என்ற ஏக்கத்தோடு வந்த இளைஞர் சீனு நம்மிடம் பேசும்போது "எனக்கு வயது 24 ஆகிவிட்டது. ஆதார் அட்டை எடுப்பதற்காக நான்கு ஆண்டுகளாக எல்லா அரசு அலுவலகங்களையும் ஏறி இறங்கி விட்டேன், கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்திலும் மூன்று முறை மனு அளித்திருக்கிறேன், இப்போது வரை நான் ஆதார் அட்டை எடுப்பதற்கு அதிகாரிகளின் தரப்பில் எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை. நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன், என்னுடைய தாய் தந்தையரும் எனக்கு பிறந்த சான்றிதழ் பெறுவதற்கு தவறி விட்டார்கள், பள்ளியில் படித்ததற்கான ஆதாரமும் என்னிடம் எதுவும் இல்லை, குடும்ப வறுமை காரணமாக பல்வேறு இடங்களில் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. "குடும்ப அட்டையிலும்( Smart card) எனக்கு அடையாள அட்டை இல்லாததால் என்னுடைய பெயரை சேர்க்க முடியாமல் போய்விட்டது. என்னிடம் இருக்கும் ஒரே ஒரு ஆதாரம் பழைய குடும்ப அட்டை மட்டும்தான். அதில் தான் என்னுடைய பெயர் இருக்கிறது. இதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பேசும் போது அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ஆதார் சேவை மையத்துக்கும் பல முறை சென்றேன். ஆனால், பிற அடையாள ஆவணங்கள் இல்லாததால் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியவில்லை." ஆதார் அட்டை எடுக்கச் சென்றால் வாக்காளர் அட்டை கேட்கிறார்கள், வாக்காளர் அட்டை எடுக்கச் சென்றால் ஆதார் அட்டை கேட்கிறார்கள். "ஆதார் அட்டை இல்லாததால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை. எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியவில்லை. என் பெயரில் ஒரு செல்பேசி இணைப்பைக்கூட வாங்க முடியவில்லை. இன்றைக்கு நடக்கும் முகாமை போல ஏராளமான முகாம்களுக்கு சென்று விட்டேன். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மாறாக நான் போய் வந்த பயணச் செலவுதான் அதிகரித்திருக்கிறது. இந்த முகாமிலாவது எனக்கு தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன்" என்றார். சீனுவின் நிலையை கேட்டறிந்த கிராம நிர்வாக அலுவலர் "இந்த முகாமில் ஏதாவது ஒரு சான்று இருந்தால் மட்டுமே உடனடியாக ஆதார் அட்டையை பெற முடியும்". ஆனால் சீனுவிடம் வேறு சான்றுகள் இல்லாததால், பழைய குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு அவர் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருவதாக சான்று வழங்கினார். அந்தச் சான்றை அடிப்படையாகக் கொண்டு "மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறும், தேவையான உதவிகளுக்கு தன் அலுவலகத்தை அணுகலாம்" என்றும் கிராம நிர்வாக அலுவலர் அறிவுறுத்தினார். இந்தச் சான்றை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் சீனுவுக்கு வழிகாட்டினர். கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்றுடன் மீண்டும் மாவட்ட நிர்வாகத்தை அணுகத் தயாராகியிருக்கிறார் சீனு. நான்கு ஆண்டுகளாக ஒரு ஆதார் அட்டைக்காக தொடரும் அவரது காத்திருப்புக்கு இந்த முறையாவது முடிவு கிடைக்குமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/seo-title-coimbatore-youth-24-struggles-for-4-years-without-aadhaar-card




