கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 13-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.இதற்கிடையே, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. கன்னட அமைப்பினர் இது கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவைக் கண்டித்து கர்நாடகத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.காவிரி படுகையில் உள்ள மைசூரு, மண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ள மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிளில் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் உருண்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அப்போது அவர்கள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை, மரண தண்டனைக்கான பரிந்துரை என்றும், கர்நாடக மக்களைப் பற்றி சிந்திக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப் பரிந்துரை செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், எக்காரணம் கொண்டும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும், மாநில விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினார்கள். மைசூரு இதேபோல், கபினி அணை அமைந்துள்ள மைசூரு மாவட்டத்திலும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்டத்தில் மைசூரு, நஞ்சன்கூடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மண்டியா, மைசூருவில் கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாளை (வியாழக்கிழமை) முழுஅடைப்பு நடக்க உள்ள நிலையில், கர்நாடகத்தில் மீண்டும் காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சட்டப் போராட்டம் இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா நிருபர்களுக்குப் புதுடெல்லியில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-நான், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் பங்கேற்றேன். அந்த ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்த கர்நாடக அரசு தயாராக உள்ளது.காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 13-ந்தேதி (நாளை) வருகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் கர்நாடக அரசு தனது வாதத்தை எடுத்து வைக்கும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை வாபஸ் பெற கர்நாடகம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.அதற்கு முன்பு அந்த ஆணையத்தின் உத்தரவு குறித்து பல்வேறு கோணங்களில் கர்நாடக அரசு விரிவாக ஆய்வு செய்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை எடுக்கும். பல்வேறு கோணங்கள், பல அம்சங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடகத்துக்கான நிவாரணத்தை மாநில அரசு பெறும். மிகவும் கடினம் எந்த அளவு வரைக்கும் செல்ல முடியுமோ, அதுவரைக்கும் சென்று கர்நாடக அரசு சட்டப் போராட்டம் நடத்தும். காவிரியில் கர்நாடகத்துக்கான நீதியை மாநில அரசு பெற்றுத்தரும். காவிரி விவகாரத்தை கர்நாடக அரசு சரியாகக் கையாளவில்லை என்று குற்றச்சாட்டு கூறுவது தவறு.தற்போதைய சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. மாறிக்கொண்டே இருக்கிறது. நீர் ஆதாரத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினம். காவிரி படுகையில் தற்போது மழை பெய்தால் இந்தக் கடினமான சூழ்நிலையை நான் ஓரளவுக்குக் கையாள முடியும். கர்நாடகம் தனது சூழ்நிலையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்பு எடுத்து வைக்கும். அதுமட்டுமின்றி, தேவைப்பட்டால் சட்டப் போராட்டம் நடத்தவும் அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/protests-erupt-again-in-karnataka-against-the-cauvery-management-authoritys-order




