சென்னை, தமிழகத்தில் 14.31 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை ரேஷன் அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்னயோ ஜனா ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் ரேகை, கண் கருவிழி பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால், இந்த வகை ரேஷன் அட்டைகளின் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 95.96 சதவீதம் பேர் பதிவு அதன்படி, தமிழகம் முழுவதும் 99.39 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைகள், 18.61 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகள் என ஒரு கோடியே 18 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள 3 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 227 உறுப்பினர்கள் அனைவரின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் பதிவை பெறுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் வரை 95.4 சதவீதம் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2-ந்தேதி மற்றும் 8, 9-ந்தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 985 பேர் தங்கள் கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் சென்று பதிவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் மேலும், இடைப்பட்ட நாட்களில் 22 ஆயிரத்து 734 பேர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், 3 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 73 பேர் நேற்று வரை கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இது சதவீதத்தில் கணக்கிடும்போது 95.96 சதவீதம் ஆகும். இன்னும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர்களை விரைந்து கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதில், பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/in-tamil-nadu-1431-lakh-ration-cardholders-have-not-registered-their-fingerprints




