சென்னை, தொகுதி மறுவரையறையை அரசியலாக்காமல் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:- இன்று தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்திருப்பது இது குறித்த முறையான புரிதல் இன்மையையே மீண்டும் நிரூபித்துள்ளது. தொகுதி மறுவரையறை என்பது எந்த ஒரு மாநிலத்தையோ, பிரதிநிதித்துவத்தையோ, அரசியல் கட்சியையோ பாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறை அல்ல என்பதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வாக்காளருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே தொகுதி மறுவரையின் அடிப்படை நோக்கம். உதாரணமாக ஒரு தொகுதியில் மக்கள் தொகை பெரிதும் அதிகரித்தும், ஆனால் மற்றொரு தொகுதியில் குறைவாக இருந்தும் ஒரே அளவிலான பிரதிநிதித்துவம் தொடரும் போது, ஒவ்வொரு வாக்கின் பிரதிநிதித்துவ மதிப்பில் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைச் சரிசெய்வதே தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கம். இதற்கு முன்பாக கடந்த 1952,1963, 1973, 2002 என நான்கு முறை தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, அந்த ஆணையத்தின் (Delimitation Commission)-ன் உத்தரவுகள் சட்ட வலிமை கொண்டவை, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் அவற்றை மாற்ற முடியாது என்றும் தெரிவிக்கிறது. மேலும், 84 வது மற்றும் 87வது அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை இடங்களின் எண்ணிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2026க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை மாற்றமின்றி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. எனவே தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கை என்று முன்கூட்டியே கூறுவது முழுமையான உண்மையை பிரதிபலிக்காது. நாட்டின் நலன் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், ஒவ்வொரு வாக்காளருக்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவம், மாநிலங்களுக்கிடையேயான சமநிலை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படையான முறையில் விவாதிப்பதே ஜனநாயகத்திற்கு உகந்தது. நாட்டின் நலனை முன்னிறுத்தாமல் தாங்கள் சார்ந்த கட்சியின் நலனை முன்னிறுத்தும் நோக்கில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே. எனவே இவற்றில் அரசியல் தலையீடு இன்றி தொகுதி மறுவரையறை பற்றிய உண்மைகளை அறிந்து வளர்ச்சி பாரதத்திற்கான ஏணிப்படிகளை நோக்கி முன்னேறுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-understand-the-facts-regarding-constituency-delimitation-without-politicizing-the-issue-vanathi-srinivasan




